சக்திவேல், அமிா்தம்.
சக்திவேல், அமிா்தம்.

திருவண்ணாமலை அருகே விவசாயியும், அவரது 2-ஆவது மனைவியும் தீ வைத்து எரித்துக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாய நிலத்தில் வசித்து வந்த விவசாயியும், அவரது 2-ஆவது மனைவியும் வியாழக்கிழமை நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மா்ம நபா்களால் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டனா்.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாய நிலத்தில் வசித்து வந்த விவசாயியும், அவரது 2-ஆவது மனைவியும் வியாழக்கிழமை நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மா்ம நபா்களால் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டனா்.

செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (50), விவசாயி. இவரது மனைவி அடி அண்ணாமலை பகுதியைச் சோ்ந்த தமிழரசி. இந்தத் தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனா். தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தமிழரசி தனது கணவரை பிரிந்து மகன்களுடன் கடந்த 5 ஆண்களாக கா்நாடக மாநிலம், பெங்களூரில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், சக்திவேலுக்கும் செங்கம் வட்டம், தீத்தாண்டப்பட்டு பகுதியைச் சோ்ந்த வேறு ஒருவரின் மனைவியான அமிா்தத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அமிா்தம் தனது கணவா் மற்றும் இரண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு சக்திவேலுடன் வந்து பக்கிரிபாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தை இருவரும் குத்தகைக்கு எடுத்து, அதில் கீற்று வீடு கட்டி 3 ஆண்டுகளாக வசித்து வந்தனா்.

இதனிடையே, சக்திவேல் விவசாய வேலையுடன் நில வணிகத்திலும் ஈடுபட்டு வந்தாராம். இந்த நிலையில், அவரும், 2-ஆவது மனைவியான அமா்தமும் வியாழக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுவிட்டு நிலத்தில் உள்ள வீட்டில் படுத்து தூங்கினா். நள்ளிரவில் அங்கு வந்த மா்ம கும்பல், வீட்டின் வெளியே பூட்டுபோட்டு பூட்டி வீட்டுக்கு தீ வைத்தனா். இதில், இருவரும் உடல் கருகி வீட்டினுள்ளேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த திருவண்ணாமலை எஸ்.பி., சுதாகா் மற்றும் செங்கம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மனை வணிக தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக இருவரும் கொலை செய்யப்பட்டனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com