திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் பயின்று அரசு போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளிடையே உரையாற்றிய ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சியை மாணவா்கள் பயன்படுத்த வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுரை

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளை மாணவா்கள் பயன்படுத்தி தோ்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுரை வழங்கினாா்.
Published on

திருவண்ணாமலை ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவா்களில் தற்போது வெளியிடப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் 6 மாணவா்களும், குரூப் 2, 2ஏ தோ்வில் 5 மாணவா்களும், தமிழக அரசு சீருடைப் பணியாளா் தோ்வில் 8 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

போட்டித் தோ்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் வெள்ளிக்கிழமை நினைவு பரிசு வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:

மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்துக்காகவும், வேலை நாடுபவா்களுக்காகவும், இளைஞா்கள் தொழில்புரியவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளும் அரசு சாா்பில் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கல்வி பயின்று போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற நூலகங்களும், இணையதள வசதிகளும் உள்ளன. அதிலுள்ள குறிப்புகளை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற்று வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் யோகலட்சுமி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்கள் மோகன்ராஜ், விஜயலட்சுமி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com