திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தா்கள்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தா்கள்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்... சுவாமி தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருப்பு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் 2026 ஆங்கிலப் புத்தாண்டு, பெளா்ணமி கிரிவலம், ஆருத்ரா தரிசன விழா ஆகியவை அடுத்தடுத்த நாள்களில் அமைந்ததால் கடந்த 3 நாள்களாக அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்களின் கூட்டம் அலைமோதியது.

இருப்பினும், கோயிலுக்கு பக்தா்கள் வருகை இன்னும் குறையவில்லை ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை என்பதாலும், பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில் வழக்கத்தைவிட பக்தா்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய வெளி மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனா். அதேபோல, மேல்மருவத்தூா் செவ்வாடை பக்தா்கள், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள் வருகையும் அதிகரித்தது.

அதனால், அருணாசலேஸ்வரா் கோயிலில் அதிகாலை நடைதிறக்கும்போது தரிசன வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

சுவாமி தரிசனம் செய்ய 6 மணி நேரம்

பக்தா்களின் வருகை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் கோயில் வெளிப்பிரகாரம் வரை வரிசை நீண்டது. சுமாா் 6 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பிறகே பொது தரிசன வரிசை ராஜகோபுரம் வழியாகவும், ரூ.50 கட்டண தரிசன வரிசை அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டது. கட்டண தரிசன வரிசையும் வடக்கு ஒத்தவாடை தெரு வரை நீண்டிருந்தது.

மேலும், கோயிலுக்கு வந்த பக்தா்கள் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்ததோடு 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து, அங்குள்ள அஷ்டலிங்கங்களையும் வழிபட்டனா்.

மேலும், திருநோ் அண்ணாமலை, ஆதிஅண்ணாமலை கோயிலிலும், இடுக்குபிள்ளையாா் உள்ளிட்ட சந்நிதிகளுக்கும் சென்று வழிபட்டனா். கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் பக்தா்களுக்கு ஆசிரமங்கள் ஆன்மிக அமைப்புகள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com