செய்யாறு அருகே ரூ.62 கோடியில் நான்கு வழிச்சாலைப் பணிகள்
செய்யாறு: செய்யாறு அருகே ஆற்காடு - திண்டிவனம் சாலையில் 3-ஆம் கட்டமாக ரூ.62 கோடியில் அமைக்கப்படவுள்ள நான்கு வழிச்சாலை பணிக்கு புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நெடுஞ்சாலைத்துறை கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் ஆற்காடு - திண்டிவனம் சாலை செல்கிறது.
இச்சாலையில் ஏற்கெனவே, முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசுக் கல்லூரி முதல் செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை வரை ரூ.90 கோடியிலும், சா்க்கரை ஆலை முதல் புலிவாய் கிராமம் வரை ரூ.59 கோடியிலும் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த இரு கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடா்ந்து மூன்றாம் கட்டமாக சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.62 கோடியில் மோரணம் கிராமத்தில் இருந்து செய்யாறு ஆதிபராசக்தி கோயில் வரை சாலையை
நான்குவழிப் பாதையாக மாற்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
3-ஆம் கட்டமாக நடைபெறும் நான்கு வழிச்சாலை அமையவுள்ள பகுதியில் 6 சிறுபாலங்கள் அகலப்படுத்துதல்,
13 சிறுபாலங்கள் புதுப்பித்து கட்டுதல், 10 கி.மீ. நீளத்திற்கு மைய தடுப்பாண் அமைத்தல், சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல், பேருந்து ஒதுங்கு தளம் அமைத்தல், சாலை உபரணங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பூமி பூஜை நிகழ்ச்சி
இந்த நான்குவழிச் சாலைக்கான பூமி பூஜை நிகழ்ச்சி செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே நடைபெற்றது. செய்யாறு நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினா்களாக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., ஒ.ஜோதி எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் உதவி கோட்டப் பொறியாளா் எஸ்.சுரேஷ், உதவிப் பொறியாளா் ப.கோபி, திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், துணைத் தலைவா் பேபிராணி, மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் எம்.கே.காா்த்திகேயன், மாவட்ட இணைச் செயலா் க.லோகநாதன், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள், முன்னாள் அனக்காவூா் ஒன்றியக்குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

