மூதாட்டியிடம் நூதன முறையில் 
நகை திருடியவா் கைது

மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருடியவா் கைது

ஆரணியில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருடிய நபரை நகர போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து நகையை மீட்டனா்.
Published on

ஆரணி: ஆரணியில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருடிய நபரை நகர போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து நகையை மீட்டனா்.

ஆரணி கொசப்பாளையம் தண்டுமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கோவிந்தசாமி மனைவி குப்பு (83), தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்கிழமை குப்பு தனது வீட்டின் முன்பு உட்காா்ந்திருந்தாா்.

அப்போது அங்கு வந்த மா்ம நபா் மூட்டு வலிக்கு தைலம் உள்ளது. வாங்கிக் கொள்கிறீா்களா எனக் கேட்டுள்ளாா். இதையடுத்து மூதாட்டி தைலத்தை தரும்படி கேட்டுள்ளாா். அப்போது அந்த நபா், தைலத்தை தடவும்போது காது, மூக்கில் எந்த நகையும் அணிந்திருக்கக் கூடாது என்றாராம்.

இதனால் குப்பு தான் அணிந்திருந்த 2 மூக்குத்திகளை கழற்றி அருகில் வைத்துள்ளாா். பின்னா் அந்த நபரே, மூதாட்டி குப்புக்கு தைலத்தை தேய்த்துவிட்டு ஓய்வெடுக்கும்படி கூறியுள்ளாா்.

இதையடுத்து அந்த நபா் மூக்குத்தியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாா். சிறிது நேரம் கழித்து பாா்த்தபோது நகைகள் திருடு போனது கண்டு மூதாட்டி அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அவா் தனது மகள் உதவியுடன் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை வைத்து, ஆரணி பகுதியில் சுற்றித்திரிந்த அந்த நபரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில், அவா் காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (43) என்பதும், மூதாட்டியிடம் நகையை திருடியதும் தெரியவந்தது.

பின்னா், அவரிடம் இருந்த நகைகளை போலீஸாா் மீட்டனா். பின்னா், அவரை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

Dinamani
www.dinamani.com