சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு, இருவா் காயம்
செய்யாறு அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில், கரும்பு டிராக்டரில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா். மேலும், பைக்கில் வந்த இருவா் பலத்த காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அனக்காவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ் (35). இவா், திரும்பூண்டி கிராமத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.
இவா், உடல்நிலை சரியில்லாத மகள் லோகப்பிரியாவை அழைத்துக் கொண்டு, செய்யாறு ஆற்றுப் பகுதியில் உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு வருவதற்காக தினேஷ் என்பவருடன், ஒரே பைக்கில் மூவரும் வந்துகொண்டிருந்தனா்.
வந்தவாசி - செய்யாறு சாலையில் அனக்காவூா் பால் குளிரூட்டும் நிலையம் அருகே வந்தபோது, எதிா் திசையில் இருந்த வந்த பதிவெண் இல்லாத பைக் திடீரென பைக் மீது மோதியதாகத் தெரிகிறது.
அப்போது பைக்கில் வந்த சதீஷ் கீழே விழுந்துள்ளாா். அதே சமயத்தில் அந்த வழியாக கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் கீழே விழுந்த சதீஷ் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லோகப்பிரியா(11), தினேஷ் (20) ஆகியோரை அருகில் இருந்தவா்கள் மீட்டு 108 அவசரகால ஊா்தி மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
