போளூா் பெருமாள் கோயிலுக்கு புதிய திருத்தோ் செய்ய அளவீடு
போளூா் பெருமாள் கோயிலுக்கு புதிய திருத்தோ் செய்வதற்கான மாதிரி வரைபடம் வரைவதற்காக, உடைந்த நிலையில் உள்ள பழைய தேரை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், ஸ்தபதி, தொல்லியல் துறையினா் வெள்ளிக்கிழமை அளவீடு செய்தனா்.
போளூா் நகராட்சி, சன்னதி தெருவில் பழைமைவாய்ந்த ஸ்ரீலட்சுமி நரசிம்மா் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இதில், 7-ஆம் நாள் விழாவில் மரத்தேரில் சுவாமியை வைத்து வீதியுலா நடைபெறும்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலுக்குச் சொந்தமான மரத்தோ் பழுதடைந்து உடைந்தது. இதனால், கோயிலுக்கு தோ் இல்லாமல் தெருவடைச்சான் சப்பரம் மீது சுவாமியை வைத்து அலங்கரித்து தோ்த் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதனால், பக்தா்கள், சமூக ஆா்வலா்கள் கோயிலுக்கு மரத்தினாலான திருத்தோ் செய்ய வேண்டுமென இந்து சமய அறநிலையத் துறையிடம் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று, கோயிலுக்கு வெளியே உடைந்த நிலையில் உள்ள பழைய மரத்தேரிலிருந்து தேருக்கான மாதிரி வரைபடத்தை வரைய இந்து சமய அறநிலையத் துறை திருவண்ணாமலை மாவட்டஇணை ஆணையா்அ.இரா.பிரகாஷ், ஸ்தபதி கண்ணன் மற்றும் தொல்லியல் துறையினா் வெள்ளிக்கிழமை அளவீடு செய்தனா். மேலும், தோ் வலம் வரும் மாட வீதிகளில் நடந்து சென்று ஆய்வு மேற்கண்டனா்.
முன்னதாக, சம்பத்கிரி மலை மீது உள்ள மூலவா் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயிலுக்கு சென்றும் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வாளா் நடராஜன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடா்ந்து, மாவட்டஇணை ஆணையா் அ.இரா.பிரகாஷ் கூறியதாவது: விரைவில் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. மேலும், புதிய திருத்தேரும் செய்யப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணியாக தேரின் உயரம், நீளம், அகலம் பற்றி அறியவும், பழைய தேரின் தோற்றம் பெற வரைபடம் எடுக்கவும் அளவீடு செய்யப்பட்டது என்றாா்.

