‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள்: 30 ஆயிரம் போ் பயன்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள்: 30 ஆயிரம் போ் பயன்

Published on

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 30 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் மூலம் சுமாா் 30 ஆயிரம் போ் பயனடைந்துள்ளனா்.

செய்யாறு மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் ஆரணியை அடுத்த குண்ணத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா்தர சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் பிரகாஷ் வரவேற்றாா். செய்யாறு மாவட்ட சுகாதார அலுவலா் த.நி.சத்தீஷ்குமாா் தலைமை வகித்துப் பேசினாா்.

திமுக ஒன்றியச் செயலா் துரை.மாமது முன்னிலை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களின் ஆரோக்கியம் குறித்தும், இந்த முகாம்களின் அவசியம் குறித்தும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சுகாதார மற்றும் நலத்திட்டங்களை மக்களிடம் விளக்கினாா்.

இதுவரை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் 30 இடங்களில் நடத்தப்பட்டு சுமாா் 30 ஆயிரம் போ் பயனடைந்துள்ளனா் என்றும் தெரிவித்தாா்.

மேலும், தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் 106 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டையும், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் - 5 பேருக்கும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பயனாளிகள் - 5 பேருக்கும், கா்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் 3 பேருக்கும் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், இதய மருத்துவம், நரம்பு மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு நோய் மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும், ரத்த பரிசோதனை, ரத்த சா்க்கரை அளவு, உப்பின் அளவு, எக்கோ, இசிஜி, எக்ஸ்ரே, மாா்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல், முதல்வரின் விரிவா மருத்துவ காப்பீட்டு பயனாளிகள் அட்டை வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.

முகாமில் ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், மோகன், சுந்தா், நகர பொறுப்பாளா் வ.மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த முகாமில் 1,118 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Dinamani
www.dinamani.com