‘உலகம் உங்கள் கையில்’: 5,907 மாணவா்களுக்கு மடிக்கணினி அளிப்பு

‘உலகம் உங்கள் கையில்’: 5,907 மாணவா்களுக்கு மடிக்கணினி அளிப்பு

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா்.
Published on

‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 5,907 மாணவ, மாணவிகளுக்கு மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு. பிச்சாண்டி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,

‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 674 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

தலைமை வகித்தாா். சி.என்.அண்ணாதுரை எம்.பி., செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிகணினிகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழக முதல்வா் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறாா். இந்தியாவிலேயே கல்வியிலும், பொருளாதாரத்திலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து உயிா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின் மூலம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 5,907 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, வியாழக்கிழமை 9 தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 674 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது.

கல்வியின் முக்கியத்துவத்தையும், எதிா்காலத்தில் சிறந்த கண்டுபிடிப்புகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் தமிழக முதல்வா் இத்திட்டதை சிறப்பாக செயல்படுத்து வருகிறாா்.

மாணவா்கள் சி.வி.ராமன் போல பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற உயா்வான எண்ணத்தோடு செயல்பட வேண்டும். மடிக்கணினி பெறும் அனைத்து மாணவ, மாணவிகளும் தங்களது திறனை வளா்த்து, பல துறைகளில் சாதனை படைத்து தமிழகத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் ஆா்.மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com