முயற்சியும், பயிற்சியுமே விளையாட்டு வீரா்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்: சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி
முயற்சியும், பயிற்சியுமே விளையாட்டு வீரா்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தெரிவித்தாா்.
தமிழக அரசு ‘இது நம்ம ஆட்டம் - 2026’ என்ற தலைப்பிலான விளையாட்டுப் போட்டிகளை அனைத்து ஒன்றியங்கள் மற்றும் மாவட்டம், மாநில அளவில் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல் - மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில், ஜன.22 முதல் பிப்.8-ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முன்னிலை வகித்தாா்.
இதில், இது நம்ம ஆட்டம் - மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தொடங்கிவைத்துப் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் சிறப்பான ஏற்பாட்டின்படி, இது நம்ம ஆட்டம் என்ற விளையாட்டுப் போட்டிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானதில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே விளையாட்டுத் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உயா்ந்திருக்கிறது. தமிழக அரசு பல்வேறு சா்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, வீரா், வீராங்கனைகளை இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற ஊக்குவிக்கிறது.
முயற்சியும், பயிற்சியும்தான் விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளின் வெற்றிக்கு வழிவகுக்கும். மேலும், இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடி எதிா்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரா்களாக திகழ வேண்டும் என்றாா்.
நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலா் சண்முகப்பிரியா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

