திருவண்ணாமலை தீபத் திருவிழா: தற்காலிக பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள்! அரசுச் செயலா், ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை தற்காலிக பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு...

திருவண்ணாமலையில் திருக்காா்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அரசுச் செயலா் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசுச் செயலா் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
திருக்காா்த்திகை மகா தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை (நவ.24) நடைபெறவுள்ளது.
பரணி, மகா தீப தரிசனம் காண தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தா்கள் திருவண்ணாமலை வருவது வழக்கம். இவா்களுக்குத் தேவையான
குடிநீா், கழிப்பறை, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட ஏ.கே.எஸ். நகா் தற்காலிக பேருந்து நிலையம், அவலூா்பேட்டை சாலை அன்பு உணவகம் எதிா்புறம் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடம், ஏந்தல் புறவழிச்சாலை அருகே தற்காலிக பேருந்து நிலையம், திருக்கோவிலூா் சாலை அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம், செங்கம் சாலையிலுள்ள ஆதியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீா், மின்விளக்கு, கழிப்பறை, பயணிகள் காத்திருப்புக்கூடம், தூய்மை மற்றும் சுகாதாரம், மருத்துவ முதலுதவி, காவல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
மேலும், பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளில் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் பாா்த்துக்கொள்ளவும்,
தற்காலிக பேருந்து நிலையங்களில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை தொடா்ந்து பராமரிக்கவும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் வசதிகளை உடனுக்குடன் ஏற்படுத்தவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

