விற்பனை சூடுபிடிக்காததால் விழி பிதுங்கும் கம்பளி வியாபாரிகள்

வேலூர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் கம்பளி விற்பனை களைகட்டிய நிலையில், நிகழாண்டில் விற்பனைக்கான பனிக்காலம் இன்னும் தொடங்காததால் வெளிமாநில வியாபாரிகள் பரிதவிப்பில் உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் கம்பளி விற்பனை களைகட்டிய நிலையில், நிகழாண்டில் விற்பனைக்கான பனிக்காலம் இன்னும் தொடங்காததால் வெளிமாநில வியாபாரிகள் பரிதவிப்பில் உள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா, புதுதில்லி போன்ற வடமாநிலங்களில் குளிர்காலத்தை சமாளிக்க ஏதுவாக கம்பளி ஆடைகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலைகள் அதிகளவில் உள்ளன.

இங்கிருந்து ஒடிஸா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கம்பளி ஆடைகளை மொத்தமாக கொள்முதல் செய்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.

இந்தத் தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் கூட்டமாக ஓரிடத்தில் தங்கி சமைத்து உண்டு வியாபாரத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தைப் பொருத்தவரையில் முக்கிய சுற்றுலாத் தலங்களான ஏலகிரி, வேலூர் பொற்கோயில், வேலூர் கோட்டை, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

ஆண்டுதோறும் அக்டோபர் இறுதியில் தொடங்கி ஜனவரி வரையில் நிலவும் குளிர்காலத்தில் இங்கு வந்து செல்வோர், உள்ளூர்வாசிகள் அதிகளவில் கம்பளி ஆடைகளை வாங்கி அணிவதால் அதற்கு தனி மவுசு அதிகரிக்கும்.

இந்த சீசனைப் பயன்படுத்திக் கொள்ளும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த கம்பளி ஆடை வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திடம் 90 நாள்கள் அனுமதி பெற்று கோட்டை பகுதியில் 40 தரைக் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கடைகளில், பச்சிளம் குழந்தைகள் முதல் 5 வயது வரையுள்ளவர்களுக்கு பேண்ட், சர்ட், தொப்பி வடிவிலான கம்பளி ஆடைகள், பெரியவர்களுக்கு சால்வைகள், ஆண், பெண்களுக்கு சொட்டர், போர்வை, குல்லா உள்ளிட்டவைகள் விற்கப்படுகின்றன. இவை ரூ.50 முதல் ரூ.1,000 வரையில் விற்பனையாகின்றன இதுதவிர குடியிருப்புப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றும் விற்கப்படுகின்றன. கடந்த காலங்களில் குளிர் தொடங்கிய நிலையில், நிகழாண்டில் இதுவரையில் குளிர்காலம் தொடங்காததால் ஒன்றிரண்டு பேர் மட்டுமே கம்பளி ஆடைகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் போதிய வருவாய் இல்லாத நிலையில் அன்றாடத் தேவைகளுக்கு வியாபாரிகள் போராடுகின்றனர்.

இதுகுறித்து கம்பளி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த பில்லிமன் மாலி கூறியது:

குளிர்காலம் தொடங்கியிருக்கும் என்ற நம்பிக்கையில் கம்பளி ஆடைகளை மொத்தமாக கொள்முதல் செய்து உரிய அனுமதி பெற்று 40 கடைகள் வைக்கப்பட்டும் வியாபாரம் சூடுபிடிக்கவில்லை.

கம்பளி ஆடைகள் விற்பனையை நம்பி 300-க்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ள நிலையில் வியாபாரம் இல்லாததால் அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com