வாலாஜா ரோடு ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டும், தென் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கிய வாலாஜா ரோடு ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என வாலாஜா ரோடு ரயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Updated on
2 min read

ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டும், தென் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கிய வாலாஜா ரோடு ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என வாலாஜா ரோடு ரயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1856 ஜூலை 1-ஆம் தேதி மெட்ராஸ் ரயில்வே நிறுவனத்தால் தென் இந்தியாவின் முதல் ரயில் சேவை தொடங்கப்பட்ட ரயில் நிலையம் என்ற பெருமை வாய்ந்த பழைமையான ரயில் நிலையம் வாலாஜா ரோடு ரயில் நிலையமாகும். தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அதிக வருவாய் ஈட்டும் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக இந்த ரயில் நிலையம் திகழ்கிறது.

தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரங்களான ராணிப்பேட்டை, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை வழியாக கேரளம், கர்நாடகம் செல்லும் அனைத்து ரயில்களும், ஆந்திரம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வாராந்திர ரயில்களும் வாலாஜா ரோடு ரயில் நிலையம் வழியாகத்தான் சென்று வருகின்றன.

மேலும், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட மக்கள் சென்னை உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரயில் மூலமாகச் செல்ல முக்கிய ரயில் வழித்தடமாக வாலாஜா ரோடு ரயில் நிலையம் உள்ளது. குறிப்பாக, வாலாஜா ரயில் நிலையத்தில் இருந்து தினமும் சென்னைக்கு வேலைக்குச் செல்வோர், வணிகர்கள், அலுவலகம் செல்வோர் என சுமார் 4 ஆயிரம் பேர் வரை சென்று வருகின்றனர்.

வாலாஜா ரயில் நிலையம் ஆண்டுக்கு சுமார் ரூ.6.50 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறது. இதன் காரணமாக, சென்னை ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டக் கூடிய முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக வாலாஜா ரோடு ரயில் நிலையம் திகழ்கிறது. ஆனால், இவ்வளவு பெருமையும், பழைமையும் வாய்ந்த வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, நிழல்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பயணிகளுக்குப் பயன்படாமல் பெயரளவில் மட்டுமே உள்ளதாக குற்றம்சாட்டும் ரயில் உபயோகிப்பாளர்கள், அவற்றை மேம்படுத்த வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் பி.கே.மிஸ்ரா, கடந்த 2013 நவம்பர் 29-ஆம் தேதி வாலாஜா ரோடு ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது, வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை, நிழல்குடை, மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையிலான நடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சென்னை- பழனி விரைவு ரயில், சென்னை- பெங்களுரூ டபுள் டக்கர் விரைவு ரயில், கோவை இன்டர் சிட்டி விரைவு ரயில் ஆகியவை வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் பி.கே.மிஸ்ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. இந்தப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கடந்த 2014 ஜனவரி 7-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தண்டவாள இணைப்புப் பகுதிகள், முன்பதிவு, பயணச் சீட்டு அலுவலகம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த அவரிடமும், வாலாஜா ரோடு ரயில் நிலைய உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், பெண்கள் ரயில் பெட்டி நிற்கும் வரை நடைமேடையை நீட்டிக்க வேண்டும். ரயில் நிலைய வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்களை திறக்க வேண்டும். ஆண்டுக்கு சுமார் ரூ.6.50 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டக்கூடிய வாலாஜா ரோடு ரயில் நிலையத்தை "பி' கிரேடு ரயில் நிலையமாக தரம் உயர்த்த வேண்டும்.

மேலும், விரைவு ரயில், டபுள் டக்கர், இன்டர்சிட்டி ஆகியவை வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மனுக்களை பெற்றுக் கொண்ட ராகேஷ் மிஸ்ரா, மேற்கண்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துச் சென்றார். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என ரயில் உபயோகிப்பாளர்கள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், வாலாஜா ரோடு ரயில் நிலையம் தொடங்கப்பட்டு சுமார் 160 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் பழைமையான ரயில் நிலையத்தை பாரம்பரிய ரயில் நிலையமாக அறிவிக்க வேண்டும் எனவும் வாலாஜா ரோடு ரயில் உபயோகிப்பாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில்களை ராணிப்பேட்டை வரை நீட்டித்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி சந்திப்பு நிலையமாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com