அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

நினைவலைகள்... மனு தாக்கல் செய்ய பணம் கொடுத்தார் எம்ஜிஆர்!

திமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போது, அதில் இணைந்து பணியாற்றி, விழுப்புரம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ஆனவர் பூ.கிருஷ்ணன் (81).

Updated On :16 ஏப்ரல் 2016, 5:20 pm

திமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போது, அதில் இணைந்து பணியாற்றி, விழுப்புரம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ஆனவர் பூ.கிருஷ்ணன் (81).

விழுப்புரம் நாலாயிரம் தெருவைச் சேர்ந்த இவர், வயது தளர்ந்த நிலையிலும், இன்றும் இயன்ற அளவு கட்சிப் பணியாற்றி வருகிறார். அவர், தனது முதல் தேர்தல் அனுபவங்களை நினைவுகூர்கிறார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான், 5-ஆம் வகுப்பு வரை படித்தேன். விழுப்புரத்தில், 1952-களில் சோடா கடை வைத்திருந்த போது, திமுகவுடன் தொடர்பு ஏற்பட்டது.

எம்ஜிஆரை திமுகவிலிருந்து நீக்கிய போது, அதைக் கண்டித்து, விழுப்புரத்தில் எனது தலைமையில் 5 நாள்கள் ஏராளமானோர் உண்ணாவிரதம் இருந்தோம். எம்ஜிஆர் மீது பற்றுகொண்ட நான் அவர், 1972-இல் அதிமுகவைத் தொடங்கிய போது, அதில் இணைந்து பணியாற்றினேன். தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டு, கட்சிப் பணியாற்றினேன்.

அதிமுக முதல் தேர்தலான 1977-இல் என்னை அழைத்த எம்ஜிஆர், விழுப்புரத்தில் போட்டியிடுமாறு சொன்னார். என்னிடம் பணமில்லை, மாம்பழப்பட்டு செல்வந்தரை நிறுத்துங்கள் என்றேன். செல்வம் தேவையில்லை, செல்வாக்குதான் வேண்டுமென்று என்னையே நிற்கச் சொன்னதுடன்,

ரூ.5 ஆயிரம் கொடுத்து, மனு தாக்கல் செய்யச் சொல்லி அனுப்பினார்.

பிரசாரத்தை தொடங்கிய போது, எம்ஜிஆர் மீது பற்று கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் என்னுடன் வந்து பணியாற்றினர். கிராமங்கள் தோறும் சைக்கிளில் சென்றுதான் பிரசாரம் செய்தேன்.

என்னை எதிர்த்து திமுகவில் கு.ப.பழனியப்பன், ஜனதா கட்சி ஆதிகேசவலு, காங்கிரஸில் காமராஜரின் சிஷ்யரான திருமாலும் போட்டியிட்டனர். 4 முனைப் போட்டி நிலவியது.

வசதி படைத்த அவர்கள் காரில் சென்று வாக்கு சேகரித்தனர். நான் சைக்கிளில் திரிவதை அறிந்த எம்ஜிஆர், என்னை அழைத்து, தேர்தல் செலவுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கினார். அதில் பழைய கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து பிரசாரம் செய்தேன்.

கார் வாடகை, டீசல், சுவரொட்டி, சுண்ணாம்பு அடிப்பது போன்ற செலவுதான் ஆனது. பொதுமக்கள், கட்சிக்காரர்களால் எனக்கு எந்தச் செலவும் ஏற்படவில்லை. வீதியெங்கும் இரட்டை இலை கோலம் போட்டு மக்கள் வரவேற்றனர். பிரசாரத்தின் போது, வழியில் டீ குடிப்பது, முறுக்கு, பட்டாணி வாங்கி சாப்பிட்டதுதான் பெரிய செலவாக இருந்தது. வாக்குச் சாவடி முகவர்கள் செலவுக்கு ரூ.25 கொடுத்ததைக்கூட அன்று வாங்க மறுத்துவிட்டனர்.

தேர்தல் பிரசாரத்துக்கு எம்ஜிஆர் வந்தார். இடமில்லாததால், கீழ்ப்பெரும்பாக்கத்தில் இருந்த உழுத விவசாய நிலத்தில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். டிராக்டர் பெட்டியில் மேடை செய்து, அதில் எம்ஜிஆர் பேசினார். தன் இளமைக்கால ஏழ்மை நிலையை அப்போது மக்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். எம்ஜிஆரை சந்தித்தபோது, நீ சுத்தமாக இருந்தா, ஊரில் தலை நிமிர்ந்து நடக்கலாம், இல்லேன்னா குனிந்துதான் போகணும் என்றார். தேர்தல் செலவு ரூ.17 ஆயிரம் ஆனது. மற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் செலவாகியிருக்கும்.

பிரசாரத்தின் போது, தனக்கு செல்வாக்கு இல்லாததை உணர்ந்த காங்கிரஸ் வேட்பாளர், அதிமுக வேட்பாளரான எனக்கு வாக்களிக்கச் சொன்ன ஆச்சரியமும் நடந்தது. அப்போதெல்லாம் வாக்குக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. விதி மீறலும், தேர்தல் கெடுபிடிகளும் அப்போதில்லை. கட்சியினரும் ஆர்வத்துடன் உடன் வந்து பிரசார பணிகளை செய்தனர்.

இன்று வாக்களிக்கப் பணம் கொடுக்க வேண்டும். கட்சிக்காரங்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்ற நிலைமை உள்ளது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.