ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை..!

சிங்காரச் சென்னை என்று கூறி பெருமைப்பட்டு கொண்டாலும், குடிசைகள் மட்டும் மாறாமல் உள்ளது உள்ளபடியே காணப்படுகின்றன. ஆட்சி மாறினாலும், குடிசைப் பகுதிகள் உள்ள காட்சி மட்டும் மாறாத நிலையில் உள்ளது.
Updated on
2 min read

சிங்காரச் சென்னை என்று கூறி பெருமைப்பட்டு கொண்டாலும், குடிசைகள் மட்டும் மாறாமல் உள்ளது உள்ளபடியே காணப்படுகின்றன. ஆட்சி மாறினாலும், குடிசைப் பகுதிகள் உள்ள காட்சி மட்டும் மாறாத நிலையில் உள்ளது.

""7 ஆண்டுகளுக்குள் சென்னை மாநகரில் அனைத்துக் குடிசைகளும் ஒழிக்கப்பட்டு, அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும்'' என்று 1970-ஆம் ஆண்டு டிசம்பரில் நொச்சிக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளைத் திறந்து வைத்து அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறினார்.

இதன் பின்னர் ஆட்சிகள் மாறி, மாறி வந்தாலும் குடிசைப் பகுதிகள் குறைந்தபாடில்லை, மாறாக அதிகரித்து வருகின்றன. அதேபோல ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகள் சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கைகளில், குடிசைப் பகுதிகளை ஒழிக்கப்போவதாக அறிவிப்பதையும் தவற விடுவதில்லை.

சென்னையில் 2,000 குடிசைப் பகுதிகள் உள்ளதாகவும், இவற்றில் 25 சதவீதம் வரை ஆக்கிரமிப்பில் வசித்து வருவதாகவும், மொத்த மக்கள்தொகையில் 43 சதவீதம் பேர் வரை குடிசைப் பகுதிகளில் வசிப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கூவம், அடையாறு ஆறுகள் ஆகியவற்றின் கரையோரம், மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடங்கள், கடற்கரைப் பகுதி, அரசால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இடங்கள் ஆகிய பகுதிகளில் குடிசைகளாக நிறைந்து காணப்படுகின்றன.

ஒரு மனிதனுக்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பது அரசின் கடமை என இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இருப்பிட வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, கல்வி வசதி என்பது பகல் நேர கனவே.

விவசாய அழிவு, கிராமங்களில் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் கிராமங்களில் இருந்து வெளியேறும் மக்கள், எஞ்சிய தங்களது வாழ்க்கையை இழுத்துச் செல்வற்கு வேறு வழியின்றி நகர்ப்புற குடிசைப் பகுதிகளை நோக்கி நகர்கின்றனர். சென்னையின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் குடிசை மக்கள், உடல் உழைப்பு சார்ந்த தொழிலைச் செய்கின்றனர். குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களின் பெருக்கத்துக்கு ஏற்றார் போலவும், நகரின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போலவும், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும்போது அப் பகுதியில் குடிசைகளில் வசிக்கும் மக்களின் நலனைக் கவனத்தில் கொண்டு திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்காததும், குடிசைப் பகுதி அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

மேலும் விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், புதிய ரயில்வே திட்டங்கள், பறக்கும் ரயில் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் என்று அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்காகவே குடிசைகளில் வசிக்கும் மக்கள், அரசால் கட்டப்பட்டிருக்கும் நகரின் தொடர்பே இல்லாத பகுதிக்கு கட்டாயப்படுத்தி கடத்தப்படுகின்றனர்.

ஆனால், அந்த மக்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல நகருக்குள் புதிதாக குடியிருப்புகள் கட்டி வீடுகள் வழங்கப்படுவதில்லை. இதன் விளைவாக அந்த மக்கள், அரசு வழங்கிய வீட்டை விட்டு வந்து, மீண்டும் நகரில் சாலையோரத்தில் குடியேறுகின்றனர்.

பலவந்தமாக இடமாற்றம்: இது தொடர்பாக குடிசை மக்களின் வளர்ச்சிக்காக பணிபுரியும் வேளச்சேரியைச் சேர்ந்த சமூக சேவகர் கூறியது:

நாட்டிலேயே குடிசைகளை ஒழிப்பதற்காக தமிழகத்தில்தான் முதல் முதலில் குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. நல்ல நோக்கத்திலேயே தொடங்கப்பட்ட இந்த வாரியத்தால் முதலில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் வரவேற்பை பெற்றன. நகருக்குள்ளேயே குடிசைவாழ் மக்களுக்காக குடியிருப்புகள் கட்டடப்பட்டு வழங்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில் குடிசைவாழ் மக்களுக்கு, கண்ணகிநகர், பெரும்பாக்கம், மணலி ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள் வழங்கப்பட்டன. இங்கு கட்டப்பட்ட குடியிருப்புகள் குடிசைவாழ் மக்களின் தேவையையும், அவர்களது உணர்வையும் அறிந்து கட்டப்படவில்லை.

இதனால் நகருக்குள் இருக்கும் தொழில் வாய்ப்பு, கல்வி வசதி, மருத்துவ வசதி, வாழ்விட உரிமை, சமூக மற்றும் பொருளாதார உரிமையை ஆகியவற்றை விட்டுவிட்டு, குடிசைவாழ் மக்களால் அந்தக் குடியிருப்புகளுக்கு இடம்பெயர முடியவில்லை. இருப்பினும் அரசு அவர்களை பலவந்தமாக குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் குடிசைவாழ் மக்கள் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்துள்ளன. ஆட்சியாளர்கள் இதை இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை என்றார்.

அரை நூற்றாண்டாக ஏமாற்றுகிறார்கள்: இதேபோல, குடிசை வாழ் மக்கள் கூறியதாவது:-

அடிப்படை வசதிகள் இல்லாமல் சுகாதாரமற்று நகரின் கழிவுத் தொட்டி போல காட்சியளிக்கும் குடிசைப் பகுதிகள் ஆட்சியாளர்களுக்கு, வாக்கு வங்கியாக மட்டுமே தெரிகின்றன. வாக்குகள் பெற்றுவிட்டு, தேர்தலுக்கு பின்னர் அரசியல் கட்சியினர், குடிசைப் பகுதிகளை தங்களது நினைவில் இருந்தே அழித்துவிடுகின்றனர்.

இவ்வாறு அரை நூற்றாண்டாக குடிசைப் பகுதி மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். குடிசை வாழ் மக்களுக்கு நகருக்குள் குடியிருப்புகளைக் கண்டறிந்து கட்டிக் கொடுத்தால், குடிசைப் பகுதிகளை கட்டுப்படுத்தலாம் என்றனர்.

தங்களை வாக்காக மட்டும் பார்க்காமல் மனிதர்களாகவும் நினைத்து ஆட்சியாளர்கள் தங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்பதே குடிசைவாழ் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com