வட்டாட்சியர் அலுவலகத்தில்  3 மாதங்களாக மனுக்கள் தேக்கம்

ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்காக விண்ணப்பித்த 300 மனுக்கள் பரிசீலனை செய்யப்படாமல் கடந்த 3 மாதங்களாக தேங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வட்டாட்சியர் அலுவலகத்தில்  3 மாதங்களாக மனுக்கள் தேக்கம்
Updated on
2 min read

ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்காக விண்ணப்பித்த 300 மனுக்கள் பரிசீலனை செய்யப்படாமல் கடந்த 3 மாதங்களாக தேங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிலம், காலி மனை ஆகியவை வருவாய்த் துறை பதிவேடுகளில் உரிமையாளர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.  நில உரிமையாளர் யார் என்பது பட்டா பதிவேட்டில் இருக்கும்.   சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் பெயரில் வருவாய்த் துறையால் வழங்கப்படும் பட்டாவை வைத்திருப்பார்கள்.   
உரிமையாளர் இறந்தால் அவருடைய வாரிசுகள் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.  அதே நேரத்தில் நிலத்தை விற்பனை செய்தால் அந்த நிலத்தை வாங்குபவரின் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். அதனை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மூலமாக மனு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். இணையதளம் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு வரப்படுகிறது.
கிராம நிர்வாக அதிகாரி விசாரணை செய்து அறிக்கை அளித்த பிறகு அது வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியரிடம் அனுப்பப்படுகிறது.  அவர் அந்த மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்து பட்டா பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பது வழக்கம். இதுதான் நடைமுறையில் இருந்து வருவது.  ஆம்பூர் வட்டத்தில் கடந்த 3 மாதங்களாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் பணி மந்தகதியில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனால் மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்படாமல் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே தேங்கிக் கிடப்பதாக பாதிப்புக்கு உள்ளானவர்கள் கூறுகின்றனர்.
  பட்டா பெயர் மாற்றும் பணியை செய்து வந்த துணை வட்டாட்சியர் பயிற்சிக்காக சென்றுள்ளதாகவும் அதனால் அப்பணி அப்படியே கிடப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் பயிற்சிக்காக சமீபத்தில் தான் சென்றுள்ளதாக கூறப்பட்டாலும், கடந்த 3 மாதங்களாக அவர் எந்த மனுக்களையும் பரிசீலனை செய்யவில்லையென மக்கள் கூறுகின்றனர்.   அதனால் நில உரிமையாளரின் வாரிசுதாரர்கள், நிலத்தை வாங்கியவர்கள் என பலரும் பட்டா பெயர் மாற்றத்துக்காக மனு செய்து விட்டு பல மாதங்களாக காத்திருக்கின்றனர்.  
இதுகுறித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க வேலூர் மாவட்ட செயலாளர் வ. அருள்சீனிவாசன் கூறியது:
 ஆம்பூர் வட்டத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்த மனுக்கள் மீதான பரிசீலனை மந்தகதியில் நடக்கிறது. பல மனுக்கள் பரிசீலனை செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பட்டா பெயர் மாறுதல்களை உடனடியாக செய்து தர வேண்டும்.
வட்டாட்சியர் விளக்கம்
 இதுகுறித்து கேட்டதற்கு ஆம்பூர் வட்டாட்சியர் ரூபிபாய் கூறியதாவது:
 பட்டா பெயர் மாறுதல் பணிகளைப் பார்த்து வந்த துணை வட்டாட்சியர் பயிற்சிக்காக சென்றுள்ளார்.  அதற்காக வேறு துணை வட்டாட்சியர் அப்பணியை கவனிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார்.  இணையதளம்  மூலம் அதற்கான பணிகள் செய்வதால் அவருக்கு டிஜிட்டல் சிக்னேச்சர் எனப்படும் மின்னணு கையெழுத்து விண்ணப்பித்து பெற வேண்டியுள்ளது.  அதனால் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது.  அது வந்த உடன் பட்டா பெயர் மாறுதல் பணிகள் நடைபெறும் என்றார்.
நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள கால தாமதத்துக்கு பயனாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
 பல்வேறு காரணங்களுக்காக பட்டா பெயர் மாறுதலுக்காக விண்ணப்பம் செய்துவிட்டு கடந்த 3 மாதங்களாக காத்திருக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பட்டா பெயர் மாறுதல்களை உடனடியாக செய்து தர வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com