மக்கள் நினைத்தால் சிறிய கட்சி பெரியதாக மாறும்:பாஜக தேசிய பொதுச் செயலர் பி.வி.முரளிதரராவ்
By செய்யாறு | Published On : 22nd April 2016 12:48 AM | Last Updated : 22nd April 2016 08:22 AM | அ+அ அ- |

மக்கள் நினைத்தால் சிறய கட்சி பெரிய கட்சியாக மாறும் என்று, பாஜக தேசிய பொதுச் செயலர் பி.வி.முரளிதரராவ் தெரிவித்தார்.
செய்யாறு தொகுதி பாஜக வேட்பாளர் பி.பாஸ்கரனை ஆதரித்து அவர் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
செய்யாறு - ஆரணி கூட்டுச்சாலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.நேரு தலைமை வகித்தார். இதில், பாஜக தேசிய பொதுச் செயலர் பி.வி.முரளிதரராவ் பேசியதாவது:
தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சியினர் மாறி மாறி ஆட்சி செய்தனர். அவர்கள் தமிழக மக்களுக்காக என்ன செய்தார்கள்? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல். பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊழலற்ற ஆட்சியை பாஜக கொடுத்து வருகிறது.
இரு ஆண்டுக்கு முன்பு மோடி, பிரதமராக ஆட்சிக்கு வந்தார். அதற்கு முன்பாக குஜராத் முதல்வராக இருந்தபோதும், பிரதமரான பிறகும் ஒரு நபர்கூட அவர் ஊழல் செய்தார் எனக் கூற முடியாது. மோடி பிரதமரானவுடன் இலங்கையில் தமிழர்கள் வாழும் டெல்டா பகுதிக்குச் சென்று முதல்கட்டமாக இந்திய அரசு சார்பில் 60 ஆயிரம் வீடுகள் கட்டி தருவதற்கான உறுதிமொழியை அளித்து, அதற்கான பணியை தொடங்கியுள்ளார்.
மேலும், ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் அடிப்படை முதலீடு எதுவும் இல்லாமல் வங்கிகள் கடனுதவி வழங்கவும், எரிவாயு மானியத்தை வங்கிப்புத்தகத்தில் நேரடியாக வரவு வைக்கவும் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
கேரள வெடி விபத்து, சென்னை வெள்ள சேதம், விசாகப்பட்டினத்தில் புயல் சேதம், ஸ்ரீநகரில் மழை வெள்ள சேதங்களை நேரில் வந்து பிரதமர் பார்வையிட்டார். சென்னை வெள்ள சேதத்துக்காக ரூ. 2 ஆயிரம் கோடியை பிரதமர் ஒதுக்கியுள்ளார்.
மக்கள் நினைத்தால் சிறிய கட்சியானது பெரிய கட்சியாக மாறும். மக்கள் ஆதரவு இருந்ததால், டீ கடை நடத்திய நரேந்திர மோடி முதல்வராகி இன்று பிரதமராக ஆகியுள்ளார் என்றார்.