இணையதள வளர்ச்சியால் திரைப்படம் தொழில் பன்மடங்கு பரிணாமம் அடைந்துவிட்ட இந்தக் காலத்திலும் வேலூர் அருகே இன்னும் மணல் தரையில் அமர்ந்து திரைப்படம் பார்க்கும் வகையில் "டூரிங் டாக்கீஸ்' எனும் டெண்டு திரையரங்கு செயல்பட்டு வருவது பழைய நினைவுகளை மலரச் செய்கிறது.
வேலூர் அருகே பூட்டுத்தாக்கு பகுதியில் சுமார் 80 சென்ட் பரப்பளவில் இந்த "டூரிங் டாக்கீஸ்' அமைந்துள்ளது. கணேஷ் திரையரங்கு என்ற பெயரில் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்தத் திரையரங்கில், இப்போதும் மணல் பரப்பில் அமர்ந்தும், படுத்துக் கொண்டும் திரைப்படங்களை மக்கள் கண்டுகளித்து வருவது வியப்பாக உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் படம் பார்ப்பதையே கிராமப்புற மக்கள் இன்னும் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது மாலை 6 மணி, இரவு 9 மணி என இரு காட்சிகள் திரையிடப்படுகின்றன. ஒரு காட்சிக்கு மணல் பரப்பு, பெஞ்ச் என 222 பேர் அமர்ந்து திரைப்படம் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த "டூரிங் டாக்கீஸில்' ஒரு காலத்தில் காட்சிக்கு 500 பேர்கூட திரைப்படம் பார்த்த நிலையில், தற்போது இணையதள வளர்ச்சி, வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டி, செல்லிடப்பேசி அதிகரிப்பு போன்ற பல காரணங்களால் காட்சிக்கு 100 பேர் வந்தால் அதிகம் என்றாகிவிட்டது.
இரவு 9 மணி காட்சி என்றால் அதுவும் இல்லை என்ற நிலைதான் நிலவுகிறது. இதனால், கடும் நெருக்கடி நிலையில்தான் இந்தத் திரையரங்கை இயக்கி வருவதாகக் கூறுகிறார் அதன் உரிமையாளர் கணேசன் (65).
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த 1981-ஆம் ஆண்டு ஆனந்த் வடிவேல் என்பவரால் நேஷனல் திரையரங்கு என்ற பெயரில் இந்த "டூரிங் டாக்கீஸ்' தொடங்கப்பட்டது. நஷ்டம் காரணமாக ஒரே ஆண்டில் இந்தத் திரையரங்கை எனக்கு விற்றுவிட்டனர்.
அப்போது ரூ. 50 ஆயிரம் தொகைக்கு திரையரங்கை வாங்கிய நான், இதன் பெயரை கணேஷ் திரையரங்கு என மாற்றம் செய்ததுடன், கூடுதலாக 15 ஒலிபெருக்கி, 15 மின்விசிறி, ஜெனரேட்டர் போன்ற வசதிகளையும் ஏற்படுத்தினோம்.
இதனால், ஓரிரு ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய திரையரங்கு பின்னர் மக்களின் மனம் கவர்ந்த திரையரங்கமாக மாறியது.
சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிடப்படும் சமயங்களில் கூட்டம் அலைமோதும். மேலும், திருவிழா சமயங்களில் குடும்பத்துடன் இங்கு வந்து திரைப்படம் பார்ப்பதை மக்கள் மகிழ்ச்சியாக எண்ணினர்.
ஆனால், தற்போது பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகரித்துவிட்டதாலும், இணையதள வளர்ச்சியாலும் மக்கள் திரையரங்குக்கு வருவதையே விரும்புவதில்லை.
முன்பு பிலிம் புரஜெக்டர் மூலம் திரையரங்கு இயக்கப்பட்ட நிலையில், தற்போது நவீன காலத்துக்கு ஏற்ப சினிமா திரையிடும் இயந்திரங்களும், நவீன ஒலி, ஒளி அமைப்பும் செய்யப்பட்டுள்ளன. எனினும், திரையரங்குக்கு இரு காட்சிகளுக்கும் சேர்த்து 100 பேர்கூட வருவதில்லை. இதனால், சினிமா விநியோகஸ்தருக்கான தொகை, திரையரங்கை இயக்குவதற்கான தொகை, ஆபரேட்டர் சம்பளம், நில வாடகை போக அதிக லாபம் கிடைப்பதில்லை.
இருப்பினும், உழைத்துக் களைத்து வரும் கிராம மக்களுக்கு சேவையாகவும், தொழிலை கைவிடக் கூடாது என்ற எண்ணத்திலும் இந்த திரையரங்கை தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்றார் அவர்.
தொழில்நுட்ப வளர்ச்சி மக்களை இயந்திரமயமாக்கிவிட்டாலும், பழைமை என்பது எப்போதும் நாம் விரும்பும் ஒன்றாகவே உள்ளது. அத்தகைய பழைமையை மீண்டும் அசைபோடச் செய்யும் வகையில் வகையில் இந்த "டூரிங் டாக்கீஸ்' விளங்கி வருகிறது என்றால் மிகையில்லை.