தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு இன்றி காணப்படும் ஓய்வறைகள்

வாலாஜாபேட்டை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட ஓய்வு அறைகள் பராமரிப்பு மற்றும் பயன்பாடின்றி
Updated on
1 min read



வாலாஜாபேட்டை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட ஓய்வு அறைகள் பராமரிப்பு மற்றும் பயன்பாடின்றி பூட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாடு முழுவதும் வாகனப் போக்குவரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பயணம் செய்வதற்காக மட்டுமன்றி, மாநிலங்களுக்கு இடையே சரக்குப் போக்குவரத்துக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் பெரும் பங்காற்றி வருகின்றன. ஆனால், மாநிலம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் நாள்தோறும் ஏராளமான விபத்துகளும் நிகழ்ந்து, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதற்கு காரணம் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, அதன் ஓட்டுநர்கள் ஓய்வு எடுக்க போதிய வசதி இல்லை என ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.
நீண்ட தூரப் பயணம் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும்பாலும் சோர்வு மற்றும் தூக்கமின்மையால் விபத்துகள் ஏற்படுகின்றன.
இதையடுத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ. தொலைவிலும் ஒரு ஓய்வு அறை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனம் நிறுத்துமிடம், வணிக வளாகம், உணவகம், குடிநீர், ஓய்வறை, குளியலறை, கழிப்பறை, வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வுப் பூங்கா அமைக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பராமரிப்பின் கீழ் பயன்பாட்டில் உள்ளது.
வாகன ஓட்டிகளின் வசதிக்காக சுங்கச்சாவடிகளிலும், நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியிலும் கழிப்பறை, ஓய்வறை, உணவகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சாலைப் பராமரிப்பு, வாகன ஓட்டிகளுக்கு அடிப்படை வசதி ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை-பெங்களூரு 6 வழிச்சாலையில் உள்ள ஓய்வறையில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என வாகன ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், வேன், பேருந்து போன்ற இலகுரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
குறிப்பாக வாலாஜாபேட்டை அருகே வாகன ஓட்டுநர்களின் பயன்பாட்டுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வு அறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தன.
இந்த ஓய்வு அறைகள் பராமரிப்பு இன்றி பூட்டப்பட்டுள்ளதால் நாளடைவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளன. இதனால், இவ்வழியே தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஓய்வறைகள் பயன்பாட்டில் இல்லாததால் ஓய்வெடுக்க முடியாமல் தொடர்ந்து வாகனங்களை ஓட்டிச் செல்லும் சூழலில் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
எனவே, நெடுஞ்சாலைத் துறையும், தனியார் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனத்தினரும் பூட்டிக் கிடக்கும் ஓய்வு அறைகளை திறந்து, உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com