மத்திய அரசின் சில்லறை உர விற்பனை நிலையங்கள் தொடங்கப்படுமா?

விவசாயிகளுக்கு மலிவு விலையில் அனைத்து விதமான உரங்கள் மற்றும்  விவசாயத் தகவல் சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய
Updated on
2 min read

விவசாயிகளுக்கு மலிவு விலையில் அனைத்து விதமான உரங்கள் மற்றும்  விவசாயத் தகவல் சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய மத்திய அரசின் நேரடி சீர்மிகு சில்லறை உர விற்பனை நிலையங்களை வேலூர் மாவட்டத்திலும் தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 ராணிப்பேட்டை, சிப்காட் தொழிற்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இருந்தபோதிலும், வேலூர் மாவட்ட மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இங்கு நெல், கரும்பு, நிலக்கடலை, சோளம், கம்பு, பருத்தி, ராகி, கத்திரி, வெண்டை, வாழை, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கும் பாலாறு  மற்றும் மாவட்டம் முழுவதும் அமைந்துள்ள 1,271 ஏரிகளும் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றன. 
 கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பாலாறு உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு விவசாயம் பொய்த்து வறட்சி மாவட்டமாக  அறிவிக்கக் கோரி, விவசாயிகள் பல்வேறு கட்ட  போராட்டங்கள் நடத்தி வந்தனர். விவசாயத்தை நம்பியிருந்த பலர் மாற்றுத் தொழில் தேடி வெளி மாவட்டங்களுக்கு செல்லத் தொடங்கினர். ஆனால் 2015-ஆம் ஆண்டு கனமழைக்குப் பிறகு பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நீர் நிலைகள் நிரம்பின.  இதனால் வேலூர்  மாவட்டம் வறட்சியின்  பிடியில் இருந்து  ஒரளவு மீண்டது.
 இதனால் வேலூர் மாவட்டத்தில் விவசாயப் பணி அதிகரித்துள்ளது.
 அவ்வாறு இருக்கும் பட்சத்தில் விவசாயத்துக்கு தேவையான விதைகள், உரங்கள் உழவுக்கான இயந்திரங்கள் மற்றும் விவசாய ஆலோசனைகள், விவசாயத் தகவல்கள்,  அரசின் சலுகைகள்,  மானியங்கள் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில் இடைவெளி உள்ளதால் விவசாய வளர்ச்சி சொல்லும்படியாக இல்லை என விவசாயிகள்  கூறுகின்றனர்.
 இந்நிலையில், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மதராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனமானது, விஜய் கிசான் சுவிதா கேந்திரா என்ற பெயரில் உழவர் சேவை மையங்கள் அமைத்து அங்கு நிறுவனத்தின் நேரடி சீர்மிகு சில்லறை உர விற்பனை நிலையங்கள்தொடங்கியுள்ளது.
 இந்த மையத்தின் மூலம் விவசாயத்துக்குத் தேவையான விதைகள், விதை பரிந்துரைகள், ரசாயன, இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக் கொல்லிகள், மலிவு விலையில் கிடைக்கும். மேலும் மண் பரிசோதனை, ஒருங்கிணைந்த சமச்சீர் ஊட்டச்சத்து நிர்வாகம், பல்வேறு பயிர்களுக்கான சாகுபடி தொழில்நுட்பங்கள், விளைபொருள்களுக்கான சந்தை விலை நிலவரம், பயிர் காப்பீடு ஆலோசனைகள், பருவ சீதோஷண நிலை உள்ளிட்ட அனைத்துவித விவசாயத் தகவல் சேவைகளையும் வழங்கி வருகிறது.
இந்த உழவர் சேவை மையத்துடன் கூடிய நேரடி சீர்மிகு சில்லறை உர விற்பனை நிலையங்களை வேலூர் மாவட்டத்திலும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து மாவட்டத்தின் விவசாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஒரு தாலுக்காவுக்கு 2 மையங்கள் தொடங்குவதன் மூலம் விவசாயத்துக்கு தேவையான விதை, உரங்கள்  மலிவு விலையிலும், விவசாயத் தகவல்கள் விரைவாகவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்னர்.
 அதேசமயம் அங்கு தகவல் பெற வரும் கிராமப்புற விவசாயிகளுக்கு அனைத்து  விவரங்களும் தமிழில் தரப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com