கங்கர் காலத்தைச் சேர்ந்த 2 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளியில் கங்கர் காலத்தைச் சேர்ந்த பழைமையான 2 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளியில் கங்கர் காலத்தைச் சேர்ந்த பழைமையான 2 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் க.மோகன் காந்தி, வீரராகவன், காணிநிலம் மு.முனிசாமி, சமூக ஆர்வலர் ஜானகிராமன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் இந்த 2 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
இதுகுறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியதாவது:
கங்கர் இன மன்னர்கள் மேலை கங்கர், கீழைக் கங்கர் என 2 பிரிவுகளாக இந்தியாவில் ஆட்சி புரிந்துள்ளனர். கீழைக்கங்கர்கள் ஒடிஸா பகுதியையும், மேலைக் கங்கர்கள் பெங்களூரு, மைசூரு போன்ற பகுதிகளிலும் ஆட்சி புரிந்துள்ளனர். மேலைக் கங்கர்கள் தமிழ்நாட்டில் பல்லவர் மற்றும் சோழர்களின் ஆளுகையின் கீழ் சிற்றரசர்களாக ஆட்சி புரிந்துள்ளனர். 
வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே கங்கர் கால சில நடுகற்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் திருப்பத்தூர் அருகே சுந்தரம்பள்ளியில் உள்ள பெருமாள் கோயில் வட்டத்தில் நிலப்பகுதியில் சிற்றாற்றின் வடக்குப் பகுதியில் கற்திட்டை வடிவம் கொண்ட கி.பி 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமையான நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
 இந்த நடுகல் இப்பகுதியில் நடந்த போரைச் சித்தரிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. 4.5 அடி உயரமும், 4.5 அடி அகலமும் கொண்ட பெரிய பலகைக்கல்லில் கலை நுட்பத்துடன் இந்நடுகல் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் நீண்ட வாளும் உள்ளன. வாளின் நுனிப்பகுதி எதிரி ஒருவரைக் குத்தி வீழ்த்துவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வலது பக்கம் குதிரை ஒன்று உள்ளது. 
இந்த குதிரை நடுகல் வீரன் பயன்படுத்திய வாகனமாக இருக்கலாம். போரில் தனக்கு உதவிகள் புரிந்து, எதிரிகளால் கொல்லப்பட்டு, வீரமரணம் அடைந்த குதிரைக்கு நன்றி கூறும் விதத்தில் இவ்வுருவம் இடம்பெற்றுள்ளது. 
குதிரைக்கு அருகே ஒரு மனித உருவம் உள்ளது. 
கல்லின் இடது பக்கம் 6 மனித உருவங்கள் போர்புரியும் கோலத்தில் உள்ளன. 
நடுகல்லின் மேல் பகுதியில் மூடப்பட்டிருந்த பெரிய பலகைக் கல் கீழே சரிந்துள்ளது. 
இந்த நடுகல்லுக்கு எதிர் திசையில் 10 அடி தொலைவில் மற்றொரு நடுகல் உள்ளது. இந்த 2-ஆவது நடுகல்லும் கங்கர் கால நடுகல்லாகவே கருதப்படுகிறது. 4 அடி உயரமும், 4.5 அடி அகலமும் உள்ள இக்கல்லில் வீரனின் வலது கையில் வாளும், இடது கையில் வில்லும் உள்ளன. வலது பக்கம் வாரிமுடிக்கப்பட்டக் கொண்டையுடன் இடையில் குறுவாள் உள்ளது. இந்த நடுகல்லிலும் மனித உருவச் சித்திரங்கள் உள்ளன. வலது பக்கம் நின்ற கோலத்தில் சிறு உருவமும், இடது பக்கத்தில் அமர்ந்த மற்றும் நின்ற கோலங்களில் 3 மனித உருவங்கள் இடம்பெற்றுள்ளன. 
இக்காட்சி போரில் வீரமரணம் அடைந்த வீரனை தேவர்கள் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சியாக அமைந்துள்ளது.    
இந்நடுகற்களை பனைமரம் ஏறும் சாணார் இன மக்கள், பெண் ஆடுகளை பலியிட்டு வழிபடுவதாக அறிய முடிகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com