ஜவ்வாதுமலை அருகே நவிரமலை கல்வெட்டு கண்டெடுப்பு

ஜவ்வாதுமலையில் உள்ள  புதூர்நாட்டில் சங்ககாலப் பெயரான "நவிரமலை' எனும் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜவ்வாதுமலையில் உள்ள  புதூர்நாட்டில் சங்ககாலப் பெயரான "நவிரமலை' எனும் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு  கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி மற்றும் காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஜவ்வாதுமலையில் உள்ள புதூர் நாட்டில் மேற்கொண்ட களஆய்வில் "நவிரமலை' எனும் பெயரைத் தாங்கிய கல்வெட்டை கண்டெடுத்தனர். இதுகுறித்து க.மோகன் காந்தி கூறியதாவது: 
வேலூர் முதல் சிங்காரப்பேட்டை வரை மற்றும் போளூர் முதல் ஆலங்காயம் வரை உள்ள மலைத் தொடர், ஜவ்வாதுமலை கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாகும். இந்த மலையில் கற்காலத்தைச் சேர்ந்த கற்திட்டைகள், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரிகள், பல்லவர் காலத்தைச் சேர்ந்த நடுகற்கள், பிற்காலச் சோழ, சம்புவராய, விஜயநகரத்தைச் சேர்ந்த நடுகல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்று தடயங்களுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது போல "நவிரமலை' எனும் பெயரைத் தாங்கிய கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது.
தமிழரின் பழைமையான நூலான பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் என்ற நூல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட நூலாகும்.
இந்நூல் நன்னன் சேய் நன்னன் என்னும் குறுநில மன்னன் செங்கண்மாவைத் தலைநகரமாகக் கொண்டு, சேயாற்றங்கரையில் அரசாண்டான் என்றும், அவனுடைய மலையின் பெயர் நவிரமலை என்றும் மலைபடுகடாம் கூறுகிறது.
செங்கண்மா என்னும் அவரது தலைநகரம் இன்றைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. அவருடைய நாட்டில் ஓடிய சேயாறு இன்றைக்கு செய்யாறு என அழைக்கப்படுகிறது. அவனுடைய மலையான "நவிரமலை' பற்றி ஆராய்ச்சியாளர்கள் பருவதமலையே "நவிரமலை' என்று கூறி வந்தனர். தற்போது, இக்கருத்துக்குப் புதிய செய்தி கிடைத்துள்ளது. 
ஜவ்வாதுமலையில் உள்ள புதூர் நாட்டில் பலா மரத்தடியில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் முழலைநாதர் கோயிலுக்கு தானம் கொடுத்த கொடை செய்தி உள்ளது. அதில் நவிரமலை முழலை நாதனுக்கு ஊர் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்தே போவான் என்ற செய்தியுள்ளது.
இதே கல்வெட்டின் மறுபக்கத்தில் சூலாயுதம், சூரியன், சந்திரன் படங்களோடு, கோயிலுக்குக் கொடை தந்த செய்தியே குறிப்பிடப்பட்டுள்ளது. செங்கண்மா-செங்கம், சேயாறு-செய்யாறு என்ற செய்தி உறுதியான நிலையில் நவிரமலை-பருவதமலை என்ற கணிப்பு தற்போது கிடைத்துள்ள கல்வெட்டு சான்றாதாரத்தில், ஜவ்வாது மலையின் மேற்கு மலையான புதூர் நாடு,புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடுகள் அடங்கிய மலைப்பகுதியே என்பது உறுதியாகிறது என்றார் அவர்.
இக்கள ஆய்வின்போது ஜவ்வாதுமலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கீழூரைச் சேர்ந்த கோவிந்தராஜ், வேந்தன், சித்தூரைச் சேர்ந்த சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com