சிவன் கோயில்களில் பங்குனி பிரம்மோற்சவ கொடியேற்றம்  

வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வாலாஜாபேட்டை காமாட்சி அம்மாள் சமேத ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா மார்ச் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, கொடியேற்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் குருக்கள் தலைமையில் மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழா கொடி ஏற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தொடர்ந்து நாள்தோறும் இரவு மூஷிக வாகனம், அன்னவாகனம், சிங்க வாகனம், யானை வாகனம் என பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி உலாவும், சைவ சமய சொற்பொழிவும் நடைபெறும். ஏப்ரல் 9-ஆம் தேதி மகா அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.  விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் வாலாஜாபேட்டை நகர மக்கள் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில்...
காஞ்சிபுரம், மார்ச் 21: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்தர திருக்கல்யாண பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் புதன்கிழமை விமரிசையாகத் தொடங்கியது. 
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்தர பிரம்மோற்சவ இடபக் கொடியேற்றம் புதன்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க சிறப்பாக நடைபெற்றது. 
இதையொட்டி மூலவர்,  உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர்  பவழக்கால் சப்பரத்தில் உற்சவர் எழுந்தருளி அருள்பாலித்தார்.  இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
பிரம்மோற்சவத்தையொட்டி காலை, மாலை என இருவேளையும் சிறப்பு அலங்காரத்தில் ஏலவார் குழலி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர்.
முக்கிய நிகழ்வாக வரும் திங்கள்கிழமை (மார்ச் 26) 63 நாயன்மார்கள் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளல், 27-ஆம் தேதி தேரோட்டம்,  29-ஆம் தேதி வெள்ளி மாவடி சேவை, 30-ஆம் தேதி பங்குனி உத்தர திருக்கல்யாணமும் விமரிசையாக நடக்கிறது.
 தொடர்ந்து ஏப்ரல் 3-ஆம் தேதி வரை  பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. 

ஸ்ரீபெரும்புதூர்  பூதபுரீஸ்வரர் கோயிலில்...
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீசௌந்தரவள்ளி அம்பாள் சமேத பூதபுரீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்தரப் பெருவிழா புதன்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத்  தொடங்கியது.
இதனை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விநாயகர் உற்சவம் நடைபெற்றது.   பங்குனி மாத உற்சவத்தின் முதல் நாளான புதன்கிழமை  காலை உற்சவமூர்த்திகள் சௌந்தரவள்ளி சமேத பூதபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூதபூரீஸ்வரரை வழிபாடு செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 27) தேர்த் திருவிழாவும், 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை பங்குனி உத்தர திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. 
வடாரண்யேஸ்வரர் கோயில்...
திருத்தணி, மார்ச் 21:  வடாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  
திருத்தணி முருகன் கோயிலின் துணைக்கோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில், பங்குனி மாத பிரம்மோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை (மார்ச் 19) பந்தக்கால் நிகழ்ச்சியும்,  செவ்வாய்க்கிழமை மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலாவும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதன்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. தொடர்ந்து உற்சவர் சுவாமி திருக்கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏப்ரல் 9 -ஆம் தேதி வரையில் நடைபெறும் விழாவில் தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் ஸ்ரீசோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வான கமலத் தேர் உற்சவம்  மார்ச் 27-ஆம் தேதியும், 28 -ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளன. 
நிகழ்வில், கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், இணைஆணையர் சிவாஜி மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com