கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தவ்வை' நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வளமைத் தெய்வமான "தவ்வை' நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் அருகே கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வளமைத் தெய்வமான "தவ்வை' நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேரசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார், சமூக ஆர்வலர்கள் ராதாகிருஷ்ணன், வெங்கட், முத்தமிழ் உள்ளிட்டோர் திருப்பத்தூரை அடுத்த மடவாளம் பகுதியில் உள்ள சிவன் கோயில் அருகே பழைமையான வளமைச் சடங்கில் இடம்பெறும் மூத்த தேவி நடுகல்லை கண்டெடுத்துள்ளனர். 
இதுகுறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது:
ஆதிப் பொதுவுடமைச் சமூகத்தில் பெண் முதன்மைப்படுத்தப்பட்டாள். விவசாயத்தைக் கண்டறிந்தவள் பெண். வளமையின் குறியீடாகப் பெண் கருதப்பட்டாள். இவ்வாறான நடைமுறைகள் இருந்த காலத்தை தாய்வழிச் சமூகம் என்பர். 
அக்காலத்தில் மழை வேண்டி வளமைச் சடங்குகள் நிகழ்த்தப்பட்டன. பெண்ணைத் தெய்வமாகக் கருதும் வழக்கம் பிற்காலத்தில் தோன்றியபோது, மூத்த தேவி என்று பெண் வழிபடப்பட்டாள்.
மூத்தவள் என்று பொருள்படும் பெயர் கொண்ட மூதேவி, இனக் குழு காலத்தின் வளமை மற்றும் தாய்த் தெய்வம் எனக் கூறப்படுகிறது. தற்போது, இக்காலக்கட்டங்களில் தவ்வை, சேட்டை, மாமுகடி, மூத்ததேவி, பழையோள், காக்கை கொடியோள், ஏகவேணி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த நடுகல்லை வடமொழியில் "ஜேஷ்டா' என அழைக்கப்படுகிறது.
"ஜேஷ்டா' என்றால் மூத்த என்று பொருள். தமிழ்நாட்டில் குறிப்பாக வடதமிழ்நாட்டில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூதேவிச் சிற்பங்கள் ஆங்காங்கே கண்டறியப்பட்டுள்ளன. பெருத்த வயிறும், பருத்துச் சரிந்து காணப்படும் மார்பகங்களும் இவ்வகைச் சிற்பத்தின் பொது இயல்பாகும். இது, பெண் வளமைக் காட்டும் தாய்த் தெய்வம் என்பதை உறுதிப்படுத்துகிறது. 
இங்குள்ள மூத்த தேவி நடுகல்லானது 6 அடி உயரமும், 3 அடி அகலமும் உள்ளது. 3 அடி நிலத்தினுள் புதைந்துள்ளது. வலப்புறம் காக்கையும், இடப்புறம் கழுதையும் இடம்பெற்றுள்ளன. கோரமான முகத்தோற்றம், பருத்த மார்பு, இடது கையில் துடைப்பம், வலது கையில் அபய முத்திரை ஆகியவற்றுடன் மூத்த தேவி காணப்படுகிறாள். 
இதன் கீழே வலப்புறத்தில் ஒரு ஆண் உருவமும், இடப்புறத்தில் பெண் உருவமும் உள்ளன. ஆண் உருவம் மூத்த தேவியின் மைந்தனான மாந்தன் ஆவான். பெண் உருவம் மகளான மாந்தி ஆவாள். இந்த நடுகல் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்.
முதல் தேவி என்றும் மூத்த தேவி என்றும் அழைக்கப்பட்ட சொல் காலப்போக்கில் திரிந்து, மூதேவியாக மாறிவிட்டது. மூதேவியின் கொடி - காக்கை, வாகனம் - கழுதை, கைக்கருவி - விளக்குமாறு ஆகும்.
பொதுவாக அழுக்கின் தெய்வமாக இப்போது கருதப்படும் மூதேவியே ஆக்காலத்தில் வளமையின் மூலத்தெய்வமாக இருந்துள்ளது. உரம் என்பது பயிர்களும், உயிர்களுமாகிய செல்வங்களின் மூல வடிவம். உரத்தின் மூலவடிவம் அழுக்கு. மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றின் கழிவுகளையே அழுக்கு என அழைக்கப்படுகிறது. குப்பைகளைச் சேகரிக்கும் துடைப்பம், அழுக்குகளைச் சுமக்கும் கழுதை, எஞ்சியவற்றை உண்டு துப்புரவு செய்யும் காக்கை ஆகியவை அழுக்குகளை உரமாக்கும் இயற்கையின் சக்திகளாகக் கருதப்படுகிறது.
வரலாற்றில் மூதேவியை பல்லவ பேரரசர்கள் தாங்கள் அமைத்த கோயில்களில் சிலைகளாக அமைத்து வழிபாடு நடத்தியதும், நந்திவர்ம பல்லவன் தவ்வையை குலதெய்வமாகவே வழிபட்டு வந்ததும் தெரியவருகிறது.
பல்லவர்கள் காலத்துக்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் கி.பி.10 மற்றும் 11-ஆம் நூற்றாண்டு வரை தவ்வை வழிபாடு சிறப்புற்று இருந்துள்ளதை கல்வெட்டுகள், சிற்பங்கள் வாயிலாக அறிய முடிகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com