தலா 3 பேரவைத் தொகுதிகளில் அதிமுக, திமுக முன்னிலை

வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற போதிலும், அதிமுகவும், திமுகவும் தலா 3 பேரவைத் தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.


வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற போதிலும், அதிமுகவும், திமுகவும் தலா 3 பேரவைத் தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.
வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த், 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவர் 4,85,340 வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும் பெற்றனர். இத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பேரவைத் தொகுதி வாரியாக இவ்விரு கட்சிகளும் பெற்ற வாக்குகளை ஒப்பிடுகையில், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய மூன்று பேரவைத் தொகுதிகளில் அதிமுகவும், வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய மூன்று பேரவைத் தொகுதிகளில் திமுகவும் முன்னிலை பிடித்துள்ளன.
தற்போது திமுக வசமுள்ள அணைக்கட்டுத் தொகுதியில் அதிமுக 88,770 வாக்குகளும், திமுக 79,231 வாக்குகளும்(வித்தியாசம்-9,539), குடியாத்தம் தொகுதியில் அதிமுக 94,178 வாக்குகளும், திமுக 82,887 வாக்குகளும் (வித்தியாசம்-11,291) பெற்றிருப்பதுடன், கே.வி.குப்பம் தொகுதியிலும் அதிமுக 80,100 வாக்குகளும், திமுக 71,991 வாக்குகளும் (வித்தியாசம்-8,109) பெற்றுள்ளன. மற்ற பேரவைத் தொகுதிகளான வேலூரில் திமுக 78,901, அதிமுக 72,626 வாக்குகளும் (வித்தியாசம்-6,374), ஆம்பூரில் திமுக 79,371, அதிமுக 70,768 வாக்குகளுடன் (வித்தியாசம்-8,603), தற்போது அதிமுக வசமுள்ள வாணியம்பாடியில் திமுக 92,599, அதிமுக 70,248 வாக்குகளும் (வித்தியாசம்-22,311) பெற்றுள்ளன.
குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தலைச் சந்தித்த குடியாத்தம் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.காத்தவராயன் 1,05,316 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஆர்.மூர்த்தி 78,296 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்பிறகு 3 மாதங்களில் நடந்த வேலூர் மக்களவைத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் திமுகவைவிட அதிமுக 11,291 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.
மேலும், பேரவைத் தொகுதி வாரியாக ஒவ்வொரு சுற்றுகளிலும் அதிமுக, திமுக பெற்ற வாக்குகளை ஒப்பிடுகையில், ஊரக, கிராமப்புற வாக்காளர்கள் அதிக அளவில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதும், நகரப்புறங்களில், அதிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலேயே திமுகவுக்கு சாதகமாக வாக்குகள் கிடைத்திருப்பதும் தெளிவாகியுள்ளது.
திமுகவின் வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ள இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினர் வாக்குகள் என்பதும் அக்கட்சிக்கு ஆதரவான வாக்குகள்தான் என்றும் கூறிவிட முடியாது. அதிமுக கூட்டணியில் பாஜக அங்கம் வகித்துள்ள நிலையில், ஏற்கெனவே உருவகப்படுத்தப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி எதிர்ப்பு அலையுடன் வேலூர் தேர்தலையொட்டிய நாள்களில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடுப்புச் சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றைக் கொண்டு சிறுபான்மையினரை அதிமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க நிர்பந்திக்கப்பட்டதன் வெளிப்பாடாகத்தான் இதை அறிய வேண்டியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.இதற்கு வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சிறுபான்மையின மக்கள், பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் என்றால், கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரான அப்துல் ரஹ்ராமனுக்கு (2,05,896 வாக்குகள்) அதிகமாக பாஜக வேட்பாளராக தாமரைச் சின்னத்தில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்துக்கு 3,24,326 வாக்குகள் கிடைத்திருக்கவும் வாய்ப்பில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். 
அந்தவகையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தவறவிட்ட வெற்றி வாய்ப்பை வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக பெற முடியாவிடினும், இத்தேர்தல் முடிவு என்பது அதிமுக கூட்டணிக்குத் தான் சாதகமானது என்பதையே உணர்த்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com