ஆம்பூர் அருகே கள்ளச் சாராயம் விற்றவர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.
ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் மக்கள் யாரும் சாராயம் விற்கமாட்டோம் என சில நாள்களுக்கு முன்பு போலீஸாரிடம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் அதையும் மீறி அப்பகுதியைச் சேர்ந்த குழந்தை (56) மற்றும் அவரது மகள் சரோஜா (30) ஆகிய 2 பேரும் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து வந்தனர். இதனால் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். எனினும், போலீஸார் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், குழந்தையும் அவரது மகள் சரோஜாவும் திங்கள்கிழமை காலையில் 4 லாரி டியூப்களில் சாராயம் வாங்கி வந்து பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனால் ஆவேசமடைந்த மலைக்கிராம மக்கள் அந்த இருவரையும் பிடித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் விரைந்து வந்து, 2 பேரையும் பிடித்து வாணியம்பாடி மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.