ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட நான்கரை டன் செம்மரக் கட்டைகளை வேலூர் மாவட்ட எல்லையில் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பிடிபட்ட 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் லோகநாதன் தலைமையில், லத்தேரி காவல் ஆய்வாளர் மனோன்மணி உள்ளிட்ட போலீஸார், காட்பாடி அருகே கரசமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவர் கரசமங்கலம் முஸ்லிம் காலனி தெருவைச் சேர்ந்த அமானுல்லா என்பது தெரியவந்தது. அதேசமயம், பின்னால் வந்த லாரி ஒன்று அவர்களைக் கடந்து சென்றது.
சந்தேகமடைந்த போலீஸார் அந்த லாரியை விரட்டிப் பிடித்தனர். அப்போது லாரி ஓட்டுநர் தப்பியோடி விட்டார். லாரியில் இருந்த மற்ற 3 பேரையும் போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். இதையடுத்து, அந்த லாரியை சோதனையிட்டபோது, அதில் சுமார் 2 டன் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
மேலும், இந்த கடத்தலில் அமானுல்லாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, செம்மரக்கட்டைகளுடன் லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார், அமானுல்லாவின் வீட்டில் நடத்திய சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டரை டன் செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, மொத்தமாக 250 கட்டைகள் என நான்கரை டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட நான்கு பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.