"நம்மால் இயன்றவரை மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு நாம் நல்ல நிலைக்கு வர வேண்டும். அதற்கு கல்விதான் எல்லோருக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும்' என்று நாராயணி பீடம் சக்தி அம்மா தெரிவித்தார்.
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் "வித்யா நேத்ரம்' திட்டத்தின்கீழ் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டி மேதா சூக்த யாகம் என்ற சரஸ்வதி யாகம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்த யாகத்துக்கு சக்தி அம்மா தலைமை வகித்து, சிறப்பு பூஜை செய்யப்பட்ட பேனாக்களை மாணவ, மாணவியருக்கு வழங்கி ஆசீர்வதித்தார். அப்போது அவர் பேசியது:
இளம் கன்று பயமறியாது என்பார்கள். எனினும், தேர்வு வந்துவிட்டால் அனைவரது மனதிலும் அச்சம் ஏற்படுவது வழக்கம். உண்மையில் தேர்வு என்பது கஷ்டமோ, சோதனையோ அல்ல. அது சாதிப்பதற்கான வழிமுறையாகும். தேர்வு இருந்தால்தான் திறமை வெளிப்படும். திறமை வெளி வந்தால்தான் ஒவ்வொருவருக்குள் இருக்கும் சக்தியும் வெளிப்படும். ஒருவரது சக்தியையும், திறமையையும் உலகுக்கு காட்டுவதுதான் தேர்வு. இதைப் புரிந்து கொண்டால் பயம் இருக்காது.
சரஸ்வதி என்பவர் அறிவைக் கொடுக்கக் கூடியவர். உங்களது முற்சியைத் தாண்டி தெய்வத்தின் அருளும் வேண்டும். இதற்காகத்தான் அபிஷேகம் செய்த பேனா வழங்கப்படுகிறது. இந்த பேனாவைப் பயன்படுத்துவதால் தேர்வு பயமின்றி சிறப்பாக தேர்வுகளை எழுத முடியும். இந்தப் பிறவியில் நம்மால் இயன்றவரை மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதற்காக நாம் நல்ல நிலைக்கு வர வேண்டும். கல்விதான் எல்லோருக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்றார் அவர்.
ஆவின் மேலாண்மை இயக்குநர் சி.காமராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியது:
என்னதான் நமது முயற்சி இருந்தாலும் கடவுளின் அருள் இருந்தால்தான் குறிக்கோளை அடைய முடியும். அந்த வகையில் சக்தி அம்மா ஆசி வழங்குவது மாணவர்களின் குறிக்கோளை அடைய வழிவகுக்கும். ஏறத்தாழ 20 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கான சரஸ்வதி யாகத்தை சக்தி அம்மா நடத்தி வருகிறார். பேனாக்களை வழங்குவது தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த யாகம் மாணவர்களுக்கு புதிய நம்பிக்கை, உத்வேகத்தைத் தோற்றுவிக்கும் என்றார் அவர்.
தங்கக் கோயில் இயக்குநர் எம்.சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மார்ஸ், கல்வியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சரவையில் விசிக! திருமாவளவன் அறிவிப்பு! | VCK | TVK
பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!

Podcast | TVK அமைச்சரவை விரிவாக்கம்: தனித்துவிடப்படும் DMK | Epi - 38 | News and Views





