தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள்

ஜன.14-ஆம் தேதி சென்னை மாகாணம் என்று இருந்தது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாளாகும்.
Updated on
1 min read

ஜன.14-ஆம் தேதி சென்னை மாகாணம் என்று இருந்தது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாளாகும்.  தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
மெட்ராஸ் மாகாணத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என, பல மொழிகள் பேசுபவர்களும் இருநதனர். பின்னர், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ் பேசுவோர்தான் அதிகமிருந்தார்கள். மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி விருதநகரைச் சேர்ந்த காந்தியவாதி தியாகி கண்டன் சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார்.
அவர் 76 நாள்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி உண்ணாவிரதம் இருந்தார். காமராஜர், ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள் வலியுறுத்தியும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார் தொடர்ந்து அவரது உடல்நிலைமோசமடைந்து 1956ஆம் ஆண்டு அக்டோபர் 13இல் அவர் மறைந்தார். அவருடைய தியாகத்தைத் தொடர்ந்து, மக்களிடையே "தமிழ்நாடு' என்ற பெயருக்கு ஆதரவு பெருகியது. சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் இந்தக் கோரிக்கை ஒலித்தது. பெயர்மாற்றம் ஏன் தேவை என்பது பற்றிய விவாதங்கள் பரவலாக நடைபெற்றன. 
அவரது மறைவுக்குப் பின்னர் பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி போராட்டம் நடத்தினர். அதன்படி 1962ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் "தமிழ்நாடு' பெயர் மாற்றக் கோரிக்கைக்காகத் தனி மசோதா கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 ஜனவரியில் சட்டப் பேரவையில் "தமிழ்நாடு' என்ற பெயரை மாநிலத்துக்கு சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. 
பிறகு அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 1967ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1968 நவம்பர் 23இல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து 1969ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சென்னை மாகாணம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com