அதிக வருவாய் ஈட்டும் காட்பாடி ரயில் நிலையத்தில் மேற்கூரைகள் இல்லாத அவலம்: பயணிகள் அவதி

தமிழகத்தில் அதிகப்படியான வருவாய் ஈட்டும் 20 ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கும் காட்பாடி சந்திப்பு ரயில்
அதிக வருவாய் ஈட்டும் காட்பாடி ரயில் நிலையத்தில் மேற்கூரைகள் இல்லாத அவலம்: பயணிகள் அவதி


தமிழகத்தில் அதிகப்படியான வருவாய் ஈட்டும் 20 ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கும் காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் முழுமையாக மேற்கூரைகள் அமைக்கப்படாததால் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வேலூர் மாநகரில் உள்ள காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம், சென்னை - பெங்களூரு - விழுப்புரம் - திருப்பதி வழித்தடங்களில் அமைந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் சுத்தமாகப் பராமரிக்கப்படும் ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கும் இந்த ரயில் நிலையத்தில் நாளொன்றுக்கு சுமார் 245 ரயில்கள் நின்று செல்கின்றன. சராசரியாக நாளொன்றுக்கு 18 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். 
தமிழகத்தில் உள்ள வருவாய் ஈட்டும் 20-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கும் காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் ஆண்டுக்கு சுமார் ரூ.70 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறது. எனினும், இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளில் ஒன்றான மேற்கூரைகள் முழுமையாக இல்லை.
காட்பாடி ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், நடைமேடை ஒன்று முதல் 3 வரை சென்னை, பெங்களூரு, கோவை, கேரளம் செல்லும் பயணிகள் ரயில்கள் முதன்மையாக இயக்கப்படுகின்றன. 
நடைமேடை 4, 5 ஆகியவற்றின் வழியாக வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் வழியாக தென் தமிழகத்திலிருந்து ஆந்திரத்துக்கும், ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கும் இயக்கப்படும் ரயில்கள் நின்று செல்கின்றன. 
இந்நிலையில், முதல் மற்றும் இரண்டாம் நடைமேடைகளில் மட்டுமே நீளமாக மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், 3 முதல் 5 வரையான நடைமேடைகளில் ஆங்காங்கே சில இடங்களில் மட்டுமே மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைமேடைகளின் பெரும்பாலான பகுதிகளில் மேற்கூரைகளை அமைக்காததால் பகல் நேரங்களில் ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகள் தங்கள் உடைமைகள் மற்றும் குழந்தைகளுடன் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டியுள்ளது. 
சில இடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைகளில் காத்திருக்கும்போது ரயில்கள் வந்தால் திடீரென்று தங்களுக்குரிய பெட்டியைத் தேடி பயணிகள் ஓட வேண்டியுள்ளது. இதனால் சில சமயம் பயணிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையும் ஏற்படுவதாக ரயில் பயணிகள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறியது:
வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான விஐடி பல்கலைக்கழகம், தங்கக் கோயில், சிஎம்சி மருத்துவமனை, வேலூர் கோட்டை, அருகே உள்ள திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல காட்பாடி ரயில் நிலையத்துக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், காட்பாடி ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். 
இதையடுத்து, ரயில்களின் வருகைக்காக 3 முதல் 5-ஆவது நடைமேடை வரை காத்திருக்கும் பயணிகள் மேற்கூரைகள் இல்லாததால் வெட்டவெளியில் நிற்க வேண்டியுள்ளது. இந்த நடைமேடைகளில் போதுமான இருக்கை வசதிகளும், குடிநீர்க் குழாய்களும் இல்லை. இதன்காரணமாகவும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். நடைமேடைகளில் மேற்கூரைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும், காட்பாடி ரயில் நிலையத்தில் விற்கப்படும் உணவுப் பொருள்களை நிர்ணயித்த விலைக்கு மேல் விற்பனை செய்கின்றனர். இதையும் ரயில்வே அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று பயணிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காட்பாடி ரயில் நிலைய மேலாளர் ரவீந்திரன் கூறியது: நடைமேடைகளில் மேற்கூரைகள் அமைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேவைப்படும் இடங்களில் மேற்கூரைகள் அமைப்பதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு திட்ட அறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளன. தேவைப்படும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் மேற்கூரைகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரயில் நிலையத்தில் உணவுப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக இதுவரை புகார்கள் வரவில்லை. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com