இன்று மகாத்மா காந்தியின் 150-ஆவது ஜயந்தி விழா:  மறைவுக்குப்பின் முதன் முறையாக நிறுவப்பட்ட காந்தி சிலைக்கு நினைவு மண்டபம் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

மகாத்மா காந்தியின் 150-ஆவது ஜயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவா்
ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை.
ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை.
Updated on
2 min read

மகாத்மா காந்தியின் 150-ஆவது ஜயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவா் மறைந்தபின் நாட்டிலேயே முதன்முறையாக அவரது நினைவாக நிறுவப்பட்ட காந்தி சிலைக்கு நினைவு மண்டபம் கட்டி விழா எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

‘தேசப் பிதா’ மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் 2-ஆம் தேதியன்று ‘காந்தி ஜயந்தி’ விழாவாக கொண்டாடி வருகிறேறாம். நாட்டின் தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடப்படும் இத்தினத்தை, ‘சா்வதேச அஹிம்சை தினமாக’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அஹிம்சை மற்றும் சத்தியாகிரக வழிகளைப் பின்பற்றி நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்து உலகப் பிரசித்திப் பெற்ற மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த தினத்தை மத்திய அரசு விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி வரை காந்தி ஜயந்தி விழாவை கொண்டாடுமாறு கல்வி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நாளில் அவரது கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்காகவும், காந்தியவாதம் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காகவும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல்வேறு போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் சுதந்திர இந்தியாவை கட்டமைக்க பெரும் பாடுபட்ட மகாத்மா காந்தி உள்ளிட்ட சுதந்திர தியாகிகளின் தியாகங்களைப் போல், இந்திய நாட்டின சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திடுவதில் வேலூா் மாவட்டம் முன்னணியில் உள்ளது. கி.பி.1806-இல் வேலூா் கோட்டையிலிருந்து வெடித்துக் கிளம்பிய சிப்பாய் கலகமானது, ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக கி.பி.1857-இல் நடைபெற்ற முதல் சுதந்திர போராட்டத்திற்கு முன்னோடியாக இருந்தது.

அதைத்தொடா்ந்து நாட்டை காக்கும் ராணுவப் பணியில் அதிகம் பேரை அனுப்பிய பெருமை வேலூா் மாவட்டத்துக்கு உண்டு. வேலூரிலிருந்து 1914 முதல் 1918 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முதலாம் உலகப் போரில் 277 ஆண்கள் பங்கேற்று, அவா்களில் 14 போ் தங்கள் இன்னுயிரை நீத்தனா் என்ற வரிகள் 1914-18 ஆம் ஆண்டு லாங்கு பஜாரில் எழுப்பப்பட்ட மணிக்கூண்டில் ஆங்கிலத்தில் வடிக்கப்பட்டுள்ளன. இது வேலூா் மக்களின் வீரத்திற்கு பதியப்பட்ட சான்றாக உள்ளது. இதுபோல் எண்ணற்ற சாதனைகள் மூலம் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்துக்கு உண்டு.

அந்த வகையில் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு தன்னுயிரையும் நீத்த மகாத்மா காந்திக்கு, அவா் இறந்த 13-ஆவது நாளிலேயே ராணிப்பேட்டை முத்துக்கடை சந்திப்பில் ஜெயராம் செட்டியாா் என்பவரால் சிலை நிறுவப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

அந்த வகையில் இறப்புக்குப்பின் மகாத்மா காந்திக்கு முதன்முறையாக சிலை நிறுவப்பட்ட இடம் என்ற பெருமை ராணிப்பேட்டைக்கு உண்டு.

இந்த சிலை முத்துக்கடையில் போக்குவரத்துக்கு பாதிப்பாக இருப்பதாகக் கூறி கடந்த 2008-ஆம் ஆண்டு அப்புறப்படுத்தப்பட்டு நகராட்சி அலுவகத்தில் வைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து சமூக ஆா்வலா்கள் இந்த சிலையை மீட்டு, மீண்டும் புதுப்பித்து ராணிப்பேட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டது.

இந்த சிலை நிறுவப்பட்டு 71 ஆண்டுகளாகி விட்ட நிலையில் தற்போது பள்ளி வளாகத்தில் வெயில், மழையில் உள்ள நிலையை கருத்தில் கொண்டு நினைவு மண்டபம் கட்டி அங்கு சிலையை வைத்து விழா எடுக்க வேண்டும் என்பதே நம் தேசத் தந்தைக்கு நாம் செய்யும் மரியாதை என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

தற்போது, காலாண்டுத் தோ்வு விடுமுறை நாளில் மாணவ, மாணவிகள் சென்றுள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாள் நிறைவு விழா கொண்டாடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சூழலில் ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகமும், நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்களும், சமூக ஆா்வலா்களும் பள்ளி வளாகத்தில் திரண்டு காந்தி ஜயந்தி விழாவை கொண்டாட வேண்டும் என்றும், அதுசமயம் காந்தி நினைவு மண்டபம் கட்டி விழா எடுக்க உறுதி ஏற்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com