அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கும் சீக்கராஜபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்

சீக்கராஜபுரம் வீட்டு வசதிவாரிய குடியிருப்புப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கும் சீக்கராஜபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்
Updated on
1 min read

சீக்கராஜபுரம் வீட்டு வசதிவாரிய குடியிருப்புப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
வாலாஜாபேட்டை வட்டம், சீக்கராஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பொன்னை ஆற்றுப்படுகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் உயர் வருவாய், நடுத்தர வருவாய், குறைந்த வாருவாய் என 3 பிரிவுகளாக 700- க்கும் மேற்பட்ட வீட்டு மனைப் பிரிவுகள் அமைக்கப்பட்டன. சாலை, குடிநீர், பாதாள கழிவுநீர் சாக்கடை, தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டன.
இந்த மனைகளை அருகே உள்ள பொதுத் துறை நிறுவனமான பாரத மிகுமின் (பெல்) நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலை வைத்துள்ள தொழிலதிபர்கள், வங்கி அதிகாரிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாங்கி வீடுகளைக் கட்டி குடியேறினர்.
வீட்டு உரிமையாளர்கள் ஆண்டுதோறும் வீட்டுவசதி வாரியத்துக்கும், சீக்கராஜபுரம் ஊராட்சி நிர்வாகத்துக்கும் உரிய வரியை செலுத்தி வருகின்றனர். 
ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக வீட்டுவசதி வாரியமும், சீக்கராஜபுரம் ஊராட்சி நிர்வாகமும் சாலை, கழிவுநீர்க் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் பராமரிக்கவும், மேம்படுத்தவும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
மேலும், பாதாள சாக்கடை கழிவுநீர்க் கால்வாய்கள் பல ஆண்டுகளாக பராமரிக்காததால் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், தெரு விளக்குள் இல்லாததால் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.  இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குடியிருப்புவாசிகள் புகார் கூறுகின்றனர். 
இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புக்கான வீட்டுமனைப் பிரிவு ஏற்பட்டுத்தப்பட்டு விற்பனை செய்த பிறகு, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் பிறகு பராமரிப்புப் பணிகளுக்கு ஊராட்சி நிர்வாகம்தான் பொறுப்பு எனத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் எழுமலையிடம் கேட்டதற்கு, 
சீக்கராஜபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதிக்கு ஊராட்சி நிர்வாகத்தினர் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்துகொடுப்பதில்லை என வாலாஜாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. 
இருப்பினும், அப்பகுதியில் பாதாள சாக்கடை ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதன் வழித்தடத்தில் அடைப்பு ஏற்பட்டால் அதைச் சரி செய்வதற்கான நவீன சாதனங்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் இல்லை. 
இதனால் கழிவுநீர் சாலைகளில் செல்லும் நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி பொறியாளர் கொண்ட குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தரப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com