பூமீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்
By DIN | Published On : 01st April 2019 08:15 AM | Last Updated : 01st April 2019 08:15 AM | அ+அ அ- |

குடிமல்லூர் பூமீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாலாஜாபேட்டையை அடுத்த குடிமல்லூர் கிராமம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் கி.பி. 1100-ஆம் ஆண்டுக்கு முன்னர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டன. விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது விவசாயி ஒருவர் இங்கு கிணறு வெட்டினார்.
அந்தக் கிணற்றை வெட்டியபோது ஒரு சிவலிங்கம் கிடைத்தது. லிங்கம் தோன்றிய இடத்தில் திடீரென நீரூற்று ஏற்பட்டு அப்பகுதி வெள்ளக்காடாக மாறியது. மக்களின் குடிநீர்ப் பஞ்சம் தீர்ந்தது.
இதன் நினைவாக அப்போது சோழ மன்னர் குலோத்துங்க சோழன் காலத்தில் சௌந்தர்யவல்லி உடனுறை வாஸ்து பிரளயமூர்த்தி பூமீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது என்று கல்வெட்டு கூறுகிறது.
சிதிலமடைந்திருந்த இக்கோயிலை விரைவாகச் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதை ஏற்று, கோயிலைச் சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கி திருப்பணிகள் நடைபெற்றன. அண்மையில் இப்பணிகள் நிறைவடைந்தன.
இதையடுத்து, பூமீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது. அப்போது சிவனுக்கு மிகவும் பிடித்தமான பூதகண வாத்தியங்கள் முழங்க, சிவ மந்திரங்கள் ஓத சிவாச்சாரியார்கள் கோயில் கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் வார்த்து, கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த திரளான சிவ பக்தர்கள் "ஓம் நமச்சிவாய' என முழங்கி, சிவனை வழிபட்டனர்.