மலைக் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்: அமமுக வேட்பாளர்கள் வாக்குறுதி
By DIN | Published On : 01st April 2019 08:18 AM | Last Updated : 01st April 2019 08:18 AM | அ+அ அ- |

நாயக்கனேரி, வெலத்திகமாணிபெண்டா ஆகிய மலைக் கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமமுக வேட்பாளர்கள் உறுதியளித்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பாண்டுரங்கன், ஆம்பூர் சட்டப் பேரவை இடைத் தேர்தல் வேட்பாளர் ஆர்.பாலசுப்பிரமணி ஆகியோர் மாதனூர் ஒன்றியம், அகரம்சேரி கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தனர். அதன் பின் தங்கள் பிரசாரத்தைத் தொடங்கி, சின்னச்சேரி கிராமத்தில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.
அப்போது பேசிய வேட்பாளர்கள் பாண்டுரங்கன் மற்றும் பாலசுப்பிரமணி, "ஆம்பூர் ரெட்டித்தோப்பு மேம்பாலப் பணிகளை விரைவாகத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சின்னச்சேரி - மேல்ஆலத்தூர் பாலாற்று மேம்பாலம், கீழ்முருங்கை - எம்.வி.குப்பம் பாலாற்று மேம்பாலம், பள்ளிக்குப்பம் தரைப்பாலம், நாயக்கனேரி மலை, வெலத்திகமாணிபெண்டா ஆகிய மலைக் கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தனர்.