அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்: அமைச்சர் நேரில் ஆறுதல்
By DIN | Published On : 12th April 2019 01:06 AM | Last Updated : 12th April 2019 01:06 AM | அ+அ அ- |

வாணியம்பாடி அருகே ஊர் பஞ்சாயத்தில் ஏற்பட்ட தகராறில் அதிமுக பிரமுகர் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை அமைச்சர் நிலோபர் கபீல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நெக்கனாமலைக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தராததால் அப்பகுதி மக்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக நோட்டீஸ் வெளியிட்டனர். இதையறிந்த வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் தலைமையில் வனத் துறை மற்றும் ஆலங்காயம் ஒன்றிய அதிகாரிகள் நெக்கனாமலை கிராமத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், சாலை அமைப்பதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர். தேர்தல் முடிந்ததும் உள்ளாட்சித் துறையின் மூலமாக அரசுக்குச் செலுத்த வேண்டிய
ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தி சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அதிமுக ஊராட்சி செயலர் கே.எம்.முனுசாமி (40) மற்றும் பொதுமக்கள் கலந்து பேசி தேர்தலில் வாக்களிப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக நெக்கனாமலையில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது முனுசாமி, எதற்காக தேர்தலைப் புறக்கணிப்பதாக நோட்டீஸ் வெளியிட்டீர்கள் என்று கேட்டாராம். இதனால் அங்கிருந்த சிலருக்கும், முனுசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிலர் முனுசாமியை தாக்கினராம். இதைத் தடுக்க வந்த அவரது சகோதரர் ஞானவேலுவையும் தாக்கினராம்.
பலத்த காயமடைந்த இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். விசாரணையில், தன்னை 15-க்கும் மேற்பட்ட திமுகவினர் தாக்கியதாக முனுசாமி கூறினார்.
இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.