பறக்கும் படை சோதனை: வங்கிப் பணம் ரூ. 32 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 12th April 2019 01:00 AM | Last Updated : 12th April 2019 01:00 AM | அ+அ அ- |

காட்பாடி அருகே புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட தேர்தல் பறக்கும் படை சோதனையில் வங்கி ஏஜென்சி வேனில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 32 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூரை அடுத்த காட்பாடியில் இருந்து கார்னாம்பட்டு செல்லும் சாலையில், பறக்கும் படையினர் 10-ஆம் தேதி இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த வங்கி ஏஜென்சி வேனை சோதனை செய்தனர். வேனில் கட்டுக்கட்டாக ரூ. 71 லட்சம் இருந்தது. அவற்றில், எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ரூ. 22 லட்சம், சிட்டி யூனியன் வங்கிக்குச் சொந்தமான ரூ. 15 லட்சம், ஆக்ஸிஸ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட எல்ஐசி-க்குச் சொந்தமான ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 39 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்தன.
ஆனால், கரூர் வைஸ்யா வங்கிக்குச் சொந்தமான ரூ. 32 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வருமான வரித் துறை சோதனைக்குப் பிறகு, வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் அந்தப் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.