100 சதவீத வாக்குப்பதிவு: ராட்சத பலூன் பறக்கவிட்டு விழிப்புணர்வு
By DIN | Published On : 12th April 2019 12:59 AM | Last Updated : 12th April 2019 12:59 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வேலூரில் தேர்தல் அதிகாரிகள் ராட்சத பலூனை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வேலூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், முறையான வாக்காளர் கல்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மாவட்ட முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கிகள் இணைந்து இரண்டு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியை வேலூரில் வியாழக்கிழமை நடத்தின. மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.ஏ.ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்த இந்தப் பேரணி மூலம் மாநகரின் பல்வேறு இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேல்தளத்தில் இருந்து ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. இந்த பலூனில் தேர்தல் நாள் 18.04.2019, 100 சதவீதம் வாக்களிப்பீர் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
மகளிர் திட்ட இயக்குநர் சிவராமன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தரராஜ், கனரா வங்கி மேலாளர் கார்த்திகேயன், முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், மாநகரட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.