கருப்புலீஸ்வரர் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 17th April 2019 01:06 AM | Last Updated : 17th April 2019 01:06 AM | அ+அ அ- |

குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாம சுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகளும், 7.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அமர்த்தப்பட்டு, 10.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
சக்தி அம்மா சிறப்புப் பூஜைகள் நடத்தி தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், பொருளாளர் எஸ்.அருணோதயம், கம்பன் கழகத் தலைவர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். கோயிலில் அன்னதானம் நடைபெற்றது.
நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்த தேர் மாலை 6 மணியளவில் நிலையை அடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மா.மாதவன், செயல் அலுவலர் இ.வடிவேல்துரை, திருத்தேர் கமிட்டித் தலைவர் எம்.எஸ்.அமர்நாத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...