அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 04th August 2019 12:02 AM | Last Updated : 04th August 2019 12:02 AM | அ+அ அ- |

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குடியாத்தத்தில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
குடியாத்தம் செதுக்கரை, பள்ளிகொண்டா சாலை, நேருஜி நகர், ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அதிமுக ஒன்றியச் செயலர் வி. ராமு, நிர்வாகிகள் தேவராஜ், ஏ. செல்லப்பன், எஸ்.கே. சுகுமார், செல்லாபாய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சேத்துவண்டையில்...
கே.வி. குப்பத்தை அடுத்து சேத்துவண்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்ப் பண்பாடுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார். அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் அமைச்சர்கள் சனிக்கிழமை இறுதிக்கட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் புறப்பட்ட இருசக்கர வாகன ஊர்வலத்துக்கு நகரச் செயலர் சதாசிவம் தலைமை வகித்தார். வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர். பேருந்து நிலையத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு உயர்க்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உணவுத் துறை அமைச்சர் கே.காமராஜ், ஆகியோர் வாக்கு சேகரித்து பிரசாரத்தை முடித்து வைத்தனர். முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார், திருப்பத்தூர் ஒன்றியச் செயலர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூரில்...
ஆம்பூர் தொகுதி அதிமுக சார்பில் சனிக்கிழமை மாலை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று புறவழிச்சாலை நிறைவடைந்து. அங்கு நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்துக்கு நகரச் செயலர் எம்.மதியழகன் தலைமை வகித்தார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனிசாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, மணிகண்டன், முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலர் டில்லிபாபு, விவசாயப் பிரிவுச் செயலர் ஆர்.வெங்கடேசன், தமாகா நகரத் தலைவர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.