ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா
By DIN | Published On : 04th August 2019 12:03 AM | Last Updated : 04th August 2019 12:03 AM | அ+அ அ- |

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி ஊட்டல் தேவஸ்தானத்தில் சனிக்கிழமை ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளியை ஒட்டியுள்ள காப்புக்காடு பகுதியில் அமைந்துள்ள ஊட்டல் தேவஸ்தானத்தில், சனிக்கிழமை காலை மூலவர் சரஸ்வதி, ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர், சப்த கன்னியர், நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜை, பண்டரி பஜனை, கோலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவைக் காண ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இங்குள்ள வற்றாத குளத்தில் பக்தர்கள் புனித நீராடினர்.