பாதுகாப்பு விழிப்புணர்வால் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு: மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமார் தகவல்
By DIN | Published On : 06th February 2019 05:35 AM | Last Updated : 06th February 2019 05:35 AM | அ+அ அ- |

வாணியம்பாடி காவல் சரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் வாணியம்பாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் பேசியது:
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2017- ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 670 பேர் உயிரிழந்தனர். 2018-ஆம் ஆண்டில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 510 ஆக குறைந்துள்ளது. இம்மாவட்டத்தில் சாலை விபத்துகள் 21 சதவீதமாக குறைந்து தமிழகத்திலேயே வேலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
சாலை விபத்து குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலமாகவும், அனைவரின் கூட்டு முயற்சி காரணமாகவும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.
இதேபோல் இந்த ஆண்டு அனைவரின் கூட்டு முயற்சியால் விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும். தற்போது மாவட்டம் முழுவதும் காவல் துறையில் பணிபுரியும் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிவது செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெனிபர் கலந்துகொண்டு பேசுகையில், ஆட்டோ ஓட்டுநர்கள் பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும்போது மிகவும் கவனமாகவும், சாலை விதிகளைக் கடைப்பிடித்தும் செல்ல வேண்டும் என்றார்.
வாணியம்பாடி டிஎஸ்பி முரளி தலைமை வகித்தார். ஆய்வாளர்கள் ராமசந்திரன் (நகரம்), சாந்தலிங்கம் (நாட்டறம்பள்ளி), லதா (அனைத்து மகளிர்), பாலாஜி (போக்குவரத்து) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமிய காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி வரவேற்றார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காளியப்பன், அரசு மருத்துவ அலுவலர் பசுபதி, கருணை இல்ல நிர்வாகி சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
இதைத் தொடர்ந்து சாலை விதிகள் கடைப்பிடிப்பது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. நகரக் காவல் துணை ஆய்வாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...