மதனாஞ்சேரியில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம்
By DIN | Published On : 12th February 2019 05:01 AM | Last Updated : 12th February 2019 05:01 AM | அ+அ அ- |

வாணியம்பாடி அருகேயுள்ள மதனாஞ்சேரி ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலங்காயம் ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு முன்னாள் மாவட்டச் செயலர் தேவராஜி தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் முனிவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.எஸ்.ஞானவேலன், மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் டி.பிரபாகரன், ஒன்றியச் செயலர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்பியும், மாநில சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மஸ்தான் ஆகியோர் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.
மதனாஞ்சேரி ஊராட்சியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக சுமார் ரூ.2.5 கோடியில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் கடந்தும் இதுவரை திறக்கப்படவில்லை. இந்நிலையில், மிகவும் சிதிலமடைந்த பழைய பள்ளிக் கட்டடத்தில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஊராட்சியில் 22 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2018-இல் நடைபெற்ற எருது விடும் திருவிழா நடத்தப்பட்டு அதில் கிடைத்த வருமானத்தில் பெருமாள் கோயில் திருப்பணி நடைபெற்றது. இந்நிலையில் கடந்த மாதம் மதனாஞ்சேரியில் நடக்கவிருந்த எருதுவிடும் திருவிழா நடத்தப்படப்படவில்லை. இதனால் கோயில் பணி பாதிக்கப்பட்டுள்ளது என கிராமத்தினர் குறை கூறினர்.