இலங்கை அகதிகளுக்கு பொங்கல் கூப்பன் வழங்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 04th January 2019 02:06 AM | Last Updated : 04th January 2019 02:06 AM | அ+அ அ- |

தைப் பொங்கலையொட்டி, இலங்கை அகதிகளுக்கு பொங்கல் கூப்பன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வேலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதவிர, தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு பொங்கல் கூப்பன் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கூப்பன் மூலம் ஆண்களுக்கு ரூ. 118 மதிப்புள்ள வேட்டி அல்லது கைலி, ஆண் குழந்தைகளுக்கு ரூ. 103 மதிப்புள்ள அரைக்கால் சட்டை, பெரியவர்களுக்கு ரூ. 48 மதிப்புள்ள பெட்டி கோட், ரூ. 36 மதிப்புள்ள பாய் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த கூப்பன்களைப் பெற்றுக்கொண்டு கோ-ஆப் டெக்ஸில் புத்தாடைகள் வாங்கிக் கொள்ளலாம் என்று இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 200 அகதிகள் முகாமிகளில் இந்த பொங்கல் கூப்பன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மேல்மொணவூர், குடியாத்தம், வாலாஜாபேட்டை, அணைக்கட்டு, மின்னூர், சின்னப்பள்ளிக்குப்பம், பானாவரம் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாமில் இதற்கான கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
இந்த 6 முகாமிகளில் 1,100 குடும்பங்களைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, கணக்கெடுப்புப் பணி முடிந்தவுடன் பொங்கல் கூப்பன் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.