சபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம்: கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 02:09 AM | Last Updated : 04th January 2019 02:09 AM | அ+அ அ- |

சபரிமலையில் 50 வயதுக்கு உள்பட்ட இரு பெண்கள் தரிசனம் செய்த விவகாரத்தில் கேரள மாநில அரசைக் கண்டித்து இந்து முன்னணியினர் வேலூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் கோட்டத் தலைவர் கோ.மகேஷ் தலைமை வகித்தார். கோட்டப் பொருளாளர் பாஸ்கரன், ஒருங்கிணைப்பாளர் மோகன், மாவட்டப் பொதுச் செயலர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது, சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு ஹிந்து விரோதப் போக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறி அந்த அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள் கூறியது:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதாகக் கூறி சபரிமலையில் 50 வயதுக்கு உள்பட்ட பெண்களை தரிசனத்துக்கு அனுமதிக்கும் நடவடிக்கையை கேரள அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்ட விவகாரம் உள்பட பல்வேறு தீர்ப்புகளை அமல்படுத்துவதில் உரிய அக்கறை காட்டாமல் இருந்து வருகிறது. சபரிமலை விவகாரத்தின் மூலம் கேரள அரசு முழுக்கமுழுக்க ஹிந்து விரோத செயல்பாடுகளை மட்டுமே மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு கேரள அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சபரிமலையில் பெண்கள் தரிசித்த விவகாரம் தொடர்பாக கேரள மாநில ஆளுநர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூரில் கேரள அரசைக் கண்டித்து பாஜகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் கொ.வெங்கடேசன், மாவட்டத் துணைத் தலைவர் கண்ணன், மாவட்டப் பொதுச் செயலர் வாசுதேவன், அமைப்புச் செயலர் ஈஸ்வர், நகரத் தலைவர் அன்பழகன், எஸ்.டி. பிரிவு மாநிலச் செயலர் பண்பு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.