தொடரும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆய்வு: 3 நாள்களில் 2.5 டன் பறிமுதல்
By DIN | Published On : 04th January 2019 02:06 AM | Last Updated : 04th January 2019 02:06 AM | அ+அ அ- |

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, கடந்த 3 நாள்களில் 2.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் மக்காத தன்மையுடைய 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஜன.1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ தடை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆய்வுகள் மேற்கொள்ள வேலூர் மாவட்டத்தில் 400 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் ஓட்டல்கள், வணிக வளாகங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்து
வருகின்றன.
இதன்படி, காட்பாடி சுற்றுப்புறப் பகுதிகள், வேலூர் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார அலுவலர் சிவகுமார் தலைமையில் அலுவலர் குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வின்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் 200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், வேலூர் மாநகராட்சிப் பகுதியில் கடந்த 3 நாள்களாக நடத்தப்பட்ட ஆய்வில் 2.5 டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது:
பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள்களை அரைத்து தார் சாலை அமைக்க பயன்படுத்தப்படும். ஒரு சிலர் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகள் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர்.
ஆனால், அவற்றில் பிளாஸ்டிக் கலந்த பைகள் இருந்தன. இதையடுத்து, பைகளை தீயிட்டு எரித்து எவ்வாறு உருகுகிறது என்பதை விளக்கினோம். மேலும், இதுபோன்ற பைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது என்றனர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூர் நகர்மன்ற ஆணையர் இரா.சந்திரா தலைமையில், சுகாதாரத் துறை அலுவலர் ராஜரத்தினம், ஆய்வாளர் விவேக் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்ட குழுவினர் பேருந்து நிலையம், பஜார், வாணியம்பாடி சாலை சுற்றுப்பகுதியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், கடைகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர், அங்கிருந்த தடை செய்யப்பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "திருப்பத்தூரில் பெரும்பாலான கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.