பாலாறு பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனை
By DIN | Published On : 04th January 2019 02:02 AM | Last Updated : 04th January 2019 02:02 AM | அ+அ அ- |

வாணியம்பாடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பாலாறு பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகர தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு திருப்பத்தூர் சார்-ஆட்சியர் பிரியா பங்கஜம் தலைமை வகித்தார். வட்டாட்சியர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பாலாற்றுப் பகுதியை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும், கடந்த 1-ஆம் தேதி முதல் தமிழக அரசு அமலாக்கியுள்ள பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது. சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தங்களது ஆலோசனைகளைக் கூறினர்.
இதில் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, சமூக சேவகர் சையத் நிசார் அகமது, வாணிடெக் நிர்வாக இயக்குநர் இக்பால், நெடுஞ்சாலைத் துறை கோட்ட அதிகாரி புருஷோத்தமன், நகராட்சிப் பொறியாளர் கோபு, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாலாற்றின் பல்வேறு பகுதிகளை சார் ஆட்சியர் பிரியா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.