மகா நிகும்பலா யாகம்
By DIN | Published On : 07th January 2019 01:21 AM | Last Updated : 07th January 2019 01:21 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் அமைந்துள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் மார்கழி மாத அமாவாசையையொட்டி, மகா நிகும்பலா யாகம் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
இக்கோயில் பீடாதிபதி பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில் இரவு 7 மணியளவில் மகா கணபதி ஹோமத்துடன், மகா யாகம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மகா சுதர்சன யாகம், மகா சண்டி யாகம், மகா வராஹி யாகம், பகளாமுகி யாகம் உள்ளிட்ட 21 வகையான யாகங்கள் நடைபெற்றன.
பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் மிளகாய் வற்றல், வெண்கடுகு, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு உலக நன்மை மற்றும் மழை வேண்டி நிகும்பலா யாகம் நடைபெற்றது. அதன் பின், கலசப் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து மகா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்கு குங்குமப் பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானமும் நடைபெற்றது.
இந்த வழிபாட்டில், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.