மாவட்டத்தில் ரூ.113.81 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சர் தகவல்

தமிழக அரசு சார்பில் வேலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு  ரூ. 113.81 கோடி செலவில் பொங்கல் 

தமிழக அரசு சார்பில் வேலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு  ரூ. 113.81 கோடி செலவில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக மாநில பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.
ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதி ரேஷன் கடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கி அமைச்சர் கே.சி. வீரமணி பேசியது: 
தமிழகத்தில் 2.02 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2,237.81 கோடி செலவில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
வேலூர் மாவட்டத்தில் 1,842 ரேஷன் கடைகள் மூலம் சுமார் 10.10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அந்த சிறப்பு பரிசு தொகுப்பில் ரொக்கம் ரூ. 1,000, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், துணிப் பை, 2 அடி நீள கரும்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. 
அதோடு இலவச வேட்டிச் சேலையும் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் ஜன.7 (திங்கள்கிழமை) தொடங்கி 14-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றார்.
விழாவுக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியது:
தமிழக அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன் பெறும் 80 வயதைக் கடந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் ரூ.1,000 நடப்பு மாதத்திலிருந்து தபால் அலுவலகம் வாயிலாக வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் முறை பொங்கல் பரிசாக நடைமுறைபடுத்தப்பட உள்ளது என்றார் அவர். 
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் வரவேற்றார். மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் வாழ்த்தி பேசினார். 
கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் ராஜலட்சுமி, ஆவின் தலைவர் த. வேலழகன், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் எம். மதியழகன், அதிமுக வேலூர் மேற்கு மாவட்ட விவசாயப் பிரிவு செயலர் ஆர். வெங்கடேசன், அரசு வழக்குரைஞர் ஜி.ஏ. டில்லிபாபு, வட்டாட்சியர் சுஜாதா, ஆம்பூர் வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தத்தை அடுத்த காளியம்மன்பட்டி ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கோவிந்தாபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் வி. ராமு தலைமை வகித்தார். செயலர் வாசு வரவேற்றார். எம்எல்ஏ ஜி. லோகநாதன், 1,476 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.  வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் எஸ்.எல்.எஸ். வனராஜ், என்.கே. ராஜாமணி,  
செ.கு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணத்தில் 7, 11 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த 769 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை எம்எல்ஏ சு.ரவி வழங்கினார். 
விழாவுக்கு வட்டாட்சியர் ஆர்.பாபு தலைமை வகித்தார். அரக்கோணம் எம்.பி. கோ.அரி, துணைப் பதிவாளர் பாஸ்கர், குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு துணை வட்டாட்சியர் குமார், கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடி மேலாளர் குட்டி, நகர அதிமுக செயலர் பாண்டுரங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டையில்...
வேலூர் கிழக்கு மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம், சோளிங்கர் நகர கூட்டுறவு ரேஷன் கடையில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். அமைச்சர் நிலோபர் கபீல் வாழ்த்துரை வழங்கினார்.
அமைச்சர் கே.சி.வீரமணி பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை வழங்கினார். 
விழாவில், எம்எல்ஏக்கள் சு.ரவி, ஜி.லோகநாதன், ராணிப்பேட்டை சார்-ஆட்சியர் இளம்பகவத், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் க.ராஜ்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் 
ச.காரத்திகேயன், ராமு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com