இரு தரப்பினரிடையே தகராறு: பொது வழிப்பாதை துண்டிப்பு
By DIN | Published On : 03rd July 2019 07:57 AM | Last Updated : 03rd July 2019 07:57 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் பொது வழிப்பாதை துண்டிக்கப்பட்டது.
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் உள்ள கூசன்மேடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வீட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் ஒற்றையடிப் பாதை வழியாக சென்று வருகின்றனர். தங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று அவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இது தொடர்பாக அவர்களுக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே அண்மையில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் கடந்த 5 நாள்களுக்கு முன்னர் நாட்டறம்பள்ளி அணுகு சாலையில் இருந்து கூசன்மேட்டுக்கு செல்லும் தார்ச் சாலையை பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி சாலையைத் துண்டித்தனர்.
இதனால் கடந்த 5 நாள்களாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் அவ்வழியாக நடந்து செல்லும்போது சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிலர் காயமடைகின்றனர். எனவே, பேருராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.