தண்ணீர்ப் பற்றாக்குறை உயிரினங்களுக்கு மட்டுமல்ல; "108 ஆம்புலன்ஸ்' வாகனங்களுக்கும்...

அவசரக் காலங்களில் உயிரிழப்புகளைத் தடுக்கும் உன்னதச் சேவையில் ஈடுபட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களைச்
Updated on
2 min read

அவசரக் காலங்களில் உயிரிழப்புகளைத் தடுக்கும் உன்னதச் சேவையில் ஈடுபட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களைச் சுத்தம் செய்வதற்கு பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் வசதி செய்துதரப்படாத அவலநிலை தொடர்ந்து வருகிறது. 
இதனால், நோயாளிகளின் ரத்தக்கறைகளை சுத்தம் செய்யவும், மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தவும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 
தமிழகத்தில் சாலை விபத்துகள் உள்ளிட்ட அவசரக் காலங்களில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கில் தமிழக குடும்ப நலம், பொது சுகாதாரத்துறை, "ஜிவிகே ஈஎம்ஆர்ஐ' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2008-ஆம் ஆண்டில் 108 என்ற இலவச ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியது. அதன்படி தற்போது மாநிலம் முழுவதும் 932 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 
வேலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் 52 ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவ உதவியாளர்கள், ஓட்டுநர்கள் என 250 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 40 பேர் பெண்கள். இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் தமிழகத்தில் இதுவரை 29.49 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதில், பெரும்பாலோர் கர்ப்பிணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
இத்திட்டம் உன்னதமான பணி என்றபோதிலும், தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவதால் இந்த ஆம்புலன்ஸ் சேவைக்கு அரசு மருத்துவமனை நிர்வாகங்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என அதன் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது:
வேலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் 52 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் விபத்துகளில் பாதிக்கப்பட்டோர், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை அவசர நிலையில் அருகே உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்த்து வருகிறோம். அவ்வாறு சேர்த்த பிறகு ஆம்புலன்ஸ் வாகனங்களில் சிதறியுள்ள ரத்தம் உள்ளிட்ட கழிவுகளை சுத்தம் செய்யத் தேவையான தண்ணீர் வசதியைக் கூட பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் செய்து தருவது இல்லை. 
குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 அரசு மருத்துவமனைகளில் வாலாஜாபேட்டை தவிர மற்ற எந்த அரசு மருத்துவமனையிலும் ஆம்புலன்ஸ்களை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை. இதனால், ஒவ்வொரு முறையும் நோயாளிகளை அழைத்து வந்தவுடன் மீதமாகும் குளுக்கோஸ், ஸ்பிரிட்டை வைத்தே ஆம்புலன்ஸில் சிதறியுள்ள ரத்தக்கறைளை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. 
மேலும், 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் மருத்துவ உதவியாளர்களும், ஓட்டுநர்களும் இரவு நேரங்களில் தங்குவதற்கு பெரும்பாலான இடங்களில் எந்த வசதியும் செய்து தரப்படுவதில்லை. இதனால், ஊழியர்கள் ஆம்புல்ன்ஸ் வாகனங்களிலேயே ஓய்வெடுக்க வேண்டிய நிலை உள்ளது. சில சமயம் அழைத்துவரப்படும் நோயாளிகள் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கக் கூடும். இதனால், சிதறியுள்ள ரத்தக் கறைகளால் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸில் ஓய்வெடுக்கும் ஊழியர்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 
இத்தகைய பாதிப்புகளைக் கருதி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆம்புலன்ஸ்களை சுத்தம் செய்வதற்குத் தேவையான தண்ணீர் வசதியும், ஊழியர்கள் ஓய்வெடுக்க தனி அறைகளும் ஒதுக்கித் தர வேண்டும். மேலும், ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள மருத்துவக் கழிவுகளை அரசு மருத்துவமனைகளில் ஏற்றுக் கொள்வதில்லை என்பதால் அவற்றை ஒதுக்குப்புறமான பகுதிகளில் அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. இதனால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆம்புலன்ஸ் கழிவுகளை பெற்றுக்கொள்ள அரசு மருத்துவமனைகளில் வசதி செய்துதர வேண்டும். இத்தகைய குறைபாடுகள் தமிழகம் முழுவதும் நிலவுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் சேவையின் வேலூர் மாவட்ட மேலாளர் ஆர்.கண்ணன் கூறியது:
இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 108 ஆம்புலன்ஸ்களை சுத்தம் செய்வதற்குத் தேவையான வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் மட்டும் அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
தொடர்ந்து, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தாய் வார்டுக்கு அருகே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக மாவட்டத்திலுள்ள மற்ற 11 அரசு மருத்துவமனைகளில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்படவில்லை. 
இதேபோல், 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் கழிவுகளை அந்தந்த அரசு மருத்துவமனைகளிலேயே ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் கழிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. கழிவுகளைப் பெறாத மருத்துவமனைகளிலும் அவற்றை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநரிடம் வலியுறுத்தப்படும் என்றார் அவர்.
இதுகுறித்து, மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் எம்.யாஸ்மின் கூறுகையில் "108 ஆம்புலன்ஸ்களை கவனிக்கும் பொறுப்பை செஞ்சிலுவை சங்கம் மேற்கொண்டு வருகிறது. எனினும், மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 இச்சேவைத் திட்டத்தின் மாவட்ட மேலாளருடன் கலந்தாலோசனை செய்து ஆம்புலன்ஸ்களை சுத்தம் செய்யத் தேவையான தண்ணீர் வசதியும், கழிவுகளை அப்புறப்படுத்த உரிய ஏற்பாடுகளும் செய்து தரப்படும்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com